'பேஜர்' இளைஞரின் பின்புலம் என்ன?: கேரள போலீசார் தீவிர விசாரணை
'பேஜர்' இளைஞரின் பின்புலம் என்ன?: கேரள போலீசார் தீவிர விசாரணை
ADDED : செப் 23, 2024 12:55 AM

வயநாடு: லெபனானில், 'பேஜர்' வெடித்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் ரின்சன் ஜோஸ் குறித்து வயநாட்டில், கேரள போலீசார் விசாரணை நடத்தினர். அவரது பின்புலம் தொடர்பாக இந்த விசாரணை நடந்ததாகக் கூறப்படுகிறது.
தாக்குதல்
மேற்காசிய நாடான இஸ்ரேல், பாலஸ் தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே போர் நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக, லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்தி வருகிறது.
சமீபத்தில், ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து, பேஜர் எனப்படும் தகவல்கள் பரிமாறும் சாதனங்கள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரே நேரத்தில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய பேஜர்கள் வெடித்ததில், 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 1,000க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர்.
பயங்கரவாதிகள் பயன்படுத்திய பேஜர்களை, ஐரோப்பிய நாடான நார்வேயைச் சேர்ந்த ரின்சன் ஜோஸ் என்பவரின் நிறுவனம் தயாரித்ததாக தகவல்கள் வெளியாயின.
ரின்சன் ஜோஸ், கேரளாவின் வயநாட்டைச் சேர்ந்தவர். கடந்த 10 ஆண்டுக்கு முன் படிப்பதற்காக நார்வே சென்றவர், அந்த நாட்டின் குடியுரிமையைப் பெற்றுள்ளார்.
இது தொடர்பான செய்தி வெளியானதைத் தொடர்ந்து, கேரள போலீசார், ரின்சன் ஜோஸ் பின்புலம் தொடர்பாக வயநாட்டில் விசாரணை நடத்தினர்.
இதுபோன்ற செய்திகள் வெளியாகும்போது, அதில் கூறப்படும் நபர்களின் பின்புலத்தை விசாரிப்பது வழக்கமான ஒன்று என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு
ரின்சன் ஜோஸ் கடந்தாண்டு நவ.,ல் வயநாட்டுக்கு வந்திருந்ததாகவும், ஜனவரியில் திரும்பியதாகவும், அவர்களுடைய உறவினர்கள் கூறினர். அவர், நார்வேக்கு படிக்கச் சென்றதாகவும், அங்கேயே வேலை பார்த்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், தனியாக பேஜர் தயாரிக்கும் ஆலையை நடத்தி வந்தது தொடர்பாக எதுவும் தெரியாது எனவும் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, பா.ஜ., மாநிலக் குழு உறுப்பினரான சந்தீப் வாரியர், 'ரின்சன் ஜோஸ் மண்ணின் மைந்தர். அவருக்கும், அவருடைய குடும்பத்துக்கும் தேவையான பாதுகாப்பு மற்றும் உதவிகளை செய்ய வேண்டும்' என, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.