ADDED : ஜன 09, 2025 06:32 AM
பெங்களூரு: முதல்வர் சித்தராமையா முன்பு சரணடைந்த ஆறு நக்சல்கள் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் சித்தராமையா முன்னிலையில் ஆறு நக்சல்கள் நேற்று சரண் அடைந்தனர். அவர்களின் பின்னணி என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
முண்டகாரு லதா
சிக்கமகளூரின் சிருங்கேரியை சேர்ந்தவர். ஆதிவாசி குடும்பத்தில் பிறந்த இவர், பள்ளி ஆசிரியர்களின் துன்புறுத்தல் மற்றும் வறுமை காரணமாக ஆறாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தினார். அவருக்கு 16 வயது இருக்கும்போது, குதிரே முக்கா தேசிய பூங்கா திட்டத்தால் மக்கள் வீடுகளை இழக்க ஆரம்பித்தனர்.
இதை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களில், முண்டகாரு லதாவும் ஒருவர். அரசு, தங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்காததால் கடந்த 2000ம் ஆண்டில் நக்சலாக மாறி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த ஆரம்பித்தார். கர்நாடகா, கேரளா அரசுகளுக்கு எதிராக போராடினார்.
சுந்தரி
ஆதிவாசி குடும்பத்தில் பிறந்தவர். குடும்ப வறுமை காரணமாக மூன்றாம் வகுப்பிற்கு மேல் பள்ளிக்கு செல்லவில்லை. இவரும் வனப்பகுதி மக்களுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் கலந்து கொண்டு குரல் கொடுத்தார். எந்த பலமும் கிடைக்கவில்லை. இதனால் கடந்த 2004ல் தனது 19 வது வயதில் நக்சல் அமைப்பில் சேர்ந்தார். கடந்த மாதம் சுட்டு கொல்லப்பட்ட விக்ரம் கவுடாவின் இரண்டாவது மனைவி இவர்.
வனஜாக் ஷி
பத்தாம் வகுப்பு வரை படித்த இவரும் ஆதிவாசி குடும்பத்தை சேர்ந்தவர். இரண்டு முறை கிராம பஞ்சாயத்து கவுன்சிலராக இருந்தவர். அரசியலில் தீவிரமாக இருந்தும், சில அரசியல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை அவரால் காப்பாற்ற முடியவில்லை. தங்களை சுற்றி வசிக்கும் பல குடும்பத்தினர் வறுமை மற்றும் சுரண்டலுக்கு ஆளானதை கண்டபோது, ஆயுதப் போராட்டமே சரியான வழி என்ற முடிவுக்கு வந்து 2000ல் இருந்து நக்சலாக செயல்பட்டு வந்தார்.
ஜெயண்ணா
ராய்ச்சூர் மாவட்டம், மான்வி தாலுகா, அரூலி கிராமத்தை சேர்ந்தவர். பி.ஏ., பட்டதாரி. கல்லுாரியில் படிக்கும் போது நக்சல் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, அந்த அமைப்பின் நடமாட்டத்தை ஆர்வமுடன் கவனித்து வந்தார். கடந்த 2000ல் தனது 24 வயதில் நக்சல் அமைப்பில் இணைந்தார். கேரளா, கர்நாடக அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று வந்தார்.
விவசாயிகளுக்கு எதிராக நடக்கும் அநீதியை கண்டித்து இவரது போராட்டம் இருந்தது.
வசந்த்
தமிழகத்தின் வேலுார் மாவட்டம், ஆற்காடை சேர்ந்த இவர் பி.டெக்., பட்டதாரி. தனது ஊரில் நடந்த ஜாதிய பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு, போராட்டங்களில் பங்கேற்றார். கடந்த 2010ல் நக்சல் அமைப்பில் இணைந்தார். கேரளா, கர்நாடக அரசுக்கு எதிரான போராட்டத்தில் அதிகம் பங்கேற்றவர்.
ஸ்ரீஜா
கேரளாவின் வயநாடு மாவட்டம், மக்கி மாலாவை சேர்ந்த ஆதிவாசி சமூகப் பெண். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். கேரளாவில் வனப்பகுதியை ஆக்கிரமிப்பவர்கள், ஆதிவாசி மக்களுக்கு தொல்லை கொடுப்பவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினார். கடந்த 2018ல் நக்சல் அமைப்பில் இணைந்தவர்.

