வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 206 பேர் கதி என்ன?: இறுதி கட்டத்தில் தேடுதல் வேட்டை
வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 206 பேர் கதி என்ன?: இறுதி கட்டத்தில் தேடுதல் வேட்டை
ADDED : ஆக 04, 2024 01:28 AM

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில், 206 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியாத நிலையில், தேடுதல் வேட்டை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில், பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதுவரை, 215 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 206 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் மற்றும் தேடுதல் வேட்டை ஐந்தாவது நாளாக நேற்றும் நடந்தது.
ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை உள்பட, பல அமைப்புகள் இதில் ஈடுபட்டுள்ளன.
இது குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் பினராயி விஜயன் நேற்று ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து அவர் கூறியுள்ளதாவது:
சூரல்மலை உள்ளிட்ட பகுதிகள் நிலச்சரிவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை, 87 பெண்கள், 30 குழந்தைகள், 98 ஆண்கள் என, 215 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதில், 148 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதுவரை, 67 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. அந்தந்த பஞ்சாயத்துகள் வாயிலாக, இறுதிச் சடங்குகள் செய்ய முடிவு செய்துள்ளோம்.
காயமடைந்த 81 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில், 206 பேரைக் காணவில்லை. அவர்களுடைய நிலை என்னவாயிற்று என்பது தெரியவில்லை.
மீட்புப் பணியில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் உள்பட பல அதி நவீன இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. தொடர்ந்து, ஐந்து நாட்கள் மீட்புப் பணி நடந்துள்ளது.
இதுவரை, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணி இறுதி கட்டத்தை நெருங்கிஉள்ளது.
இந்த இயற்கை பேரழிவு பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலியாறு நதியில் சிலருடைய உடல்களும், சில உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன. இவை யாருடையது என்பது அடையாளம் காண்பது பெரும் சிரமமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.