15 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் உரிகம் தபால் நிலையம் கதி என்ன?
15 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் உரிகம் தபால் நிலையம் கதி என்ன?
ADDED : ஜன 27, 2024 11:16 PM

தங்கவயல்: தங்கவயலின் தலைமை தபால் நிலையமான, உரிகம் அலுவலக கட்டடம் சிதிலமடைந்ததால், 15 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கிறது.
தங்கச் சுரங்கத்தின் தலைமை செயலகமான சொர்ண பவன், உதவி தொழிலாளர் ஆணையம், ரெஸ்க்யூ ஸ்டேஷன் என்ற சுரங்க பாதுகாப்பு நிலையம், எம்பிளாய்மென்ட் எக்சேஞ்ச், பொதுப்பணித் துறையின் விருந்தினர் மாளிகை, தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளை நடத்திய ஜிம்கானா மைதானம், கே.ஜி.எப்., கிளப், டெலிபோன் எக்சேஞ்ச், கேரளா இன்ஸ்டிடியூட், முதல் நிலைக் கல்லுாரி, நந்திதுருகம் இன்ஸ்டிடியூட், ஹென்றீஸ் சுரங்கம், வே பிரிட்ஜ், பொன் அரைப்பு ஆலை, வாக்கர்ஸ், டெய்லர்ஸ், மெயின் ஷாப்ட் சுரங்கங்கள், நந்திதுருகம் ஒர்க் ஷாப் சென்ட்ரல் ஒர்க் ஷாப் ஆகிய அனைத்து பகுதிகளும் உரிகம் தபால் நிலையத்துக்கு உட்பட்டவை.
இவை மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளான டாப் லைன், எஸ்.டி., பிளாக், என்.டி., பிளாக், டபிள்யு.டி., பிளாக், ஈ.டி., பிளாக், சிவராஜ் நகர், பூசாமி நகர், கென்னடிஸ், சுவிம்மிங் பாத் லைன், வாக்கர்ஸ் ஷாப்ட் லைன், ஐந்து விளக்கு பகுதி பங்களாக்கள், அசோகா நகர், சுவாமிநாதபுரம் ஆகிய பகுதிகளும் இன்று வரை உரிகம் தபால் நிலைய முகவரிக்கு உட்பட்டதாகவே இருந்து வருகின்றன. பின்கோடு 563 120 என்ற எண்ணாக இருக்கிறது.
ஆனால் தபால் நிலையம் சிதிலமடைந்ததால், மூடப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. கட்டடம் பாதிப்பாக இருப்பதால் உரிகம் தபால் நிலையம் தற்காலிகமாக மூடப்படுகிறது என்றனர். இதுவரை உரிகம் தபால் நிலையம் சீரமைக்கப்படவில்லை. புதிய கட்டடமும் உருவாகவும் இல்லை.
தபால் துறை அதிகாரிகள் கூறுகையில், 'கட்டடம் சீராக இருந்தால் உரிகம் தபால் நிலையத்தை இயக்கலாம்' என்கின்றனர்.
தங்கச் சுரங்க நிறுவனத்துக்கு சொந்தமாக பல பங்களாக்கள் காலியாக இருந்தும் கூட அதனை வழங்கவில்லை. எனவே, உரிகம் தபால் நிலையம், ராபர்ட்சன்பேட்டை தபால் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

