தெலுங்கானா சுருக்க குறியீடு மாற்றுவதற்கு காரணம் என்ன?
தெலுங்கானா சுருக்க குறியீடு மாற்றுவதற்கு காரணம் என்ன?
ADDED : பிப் 05, 2024 11:57 PM

ஹைதராபாத்: வாகனங்களின் நம்பர் பிளேட் உள்ளிட்டவற்றில், தெலுங்கானாவின் சுருக்கக் குறியீடு டி.எஸ்., என இருப்பதை, டி.ஜி.,யாக மாற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றது. முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
வாகனங்களில் நம்பர் பிளேட்களில், இதுவரை, டி.எஸ்., என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை, டி.ஜி., என மாற்ற முடிவு செய்ப்பட்டுள்ளது.
மாநிலத்தின் தாயாக கருதப்படும் தெலுங்கானா தல்லிக்கு புதிய உருவம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவும், ராஜேந்திராநகர் மாவட்டத்தில், உயர் நீதிமன்ற வளாகம் கட்ட, 100 ஏக்கர் நிலம் ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்தரே ஸ்ரீ எழுதியுள்ள, 'ஜெய ஜெய ஹோ தெலுங்கானா' என்ற பாடலை, மாநில கீதமாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்பு ஆட்சியில் இருந்த தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, தன் கட்சி பெயரை பாரத் ராஷ்ட்ர சமிதி என்று மாற்றியது. அந்தக் கட்சியின் பெயரைக் குறிக்கும் வகையில், மாநிலத்தின் சுருக்கக் குறியீடு இருப்பதால், அதை மாற்ற முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மாநில பட்ஜெட் கூட்டம், 8ம் தேதி துவங்க உள்ள நிலையில், இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

