கடைசி நேரத்தில் தகவல் சொல்லி என்ன பயன்; மோடிக்கு மம்தா மீண்டும் கடிதம்
கடைசி நேரத்தில் தகவல் சொல்லி என்ன பயன்; மோடிக்கு மம்தா மீண்டும் கடிதம்
ADDED : செப் 22, 2024 09:52 PM

கோல்கட்டா: மேற்கு வங்க வெள்ள பாதிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனுக்குச் (டி.வி.சி.,) சொந்தமான மைதான், பஞ்சாட் அணைகளில் இருந்து, அரசிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல், முன்னறிவிப்பு ஏதுமின்றி நீர் திறக்கப்பட்டதாகவும், இதனால், தெற்கு பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த 5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் (செப்.,20) கடிதம் எழுதியிருந்தார்.
டி.வி.சி., திட்டமிடாமல் தண்ணீரை விடுவிப்பதே இந்த வெள்ளத்துக்கு காரணம் என்றும், ஒருதலைபட்சமான போக்கு தொடர்ந்தால், எனது அரசு டிவிசியில் இருந்து முற்றிலும் விலக நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், இந்த கடிதத்தை நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டிலுக்கும் அனுப்பியிருந்தார்.
மம்தாவின் இந்த கடிதத்திற்கு அமைச்சர் சி.ஆர். பாட்டில் பதிலளித்திருந்தார். அதாவது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக, ஒவ்வொரு முறையும் தண்ணீர் திறக்கப்படும் போது, அரசுக்கு தகவல் தெரிவித்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இதனால், கடுப்பான முதல்வர் மம்தா பானர்ஜி, அமைச்சரின் விளக்கத்திற்கு மறுப்பு தெரிவித்ததுடன், பிரதமர் மோடிக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். தண்ணீர் திறப்பு விவகாரத்தில் மத்திய நீர்வளத்துறை ஆணைய அதிகாரிகள் ஒருதலைபட்சமாக முடிவெடுப்பதாகவும், மாநில அரசுடன் கலந்து ஆலோசிப்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுல்லாமல், நீர்திறப்புக்கு கொஞ்ச நேரத்திற்கு முன்பு தகவல் அளிப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க போதுமான அவகாசம் இருப்பதில்லை என்றும், எனவே, பிரதமர் மோடி உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளார்.