உங்க அடுத்த பிளான் என்ன? பிரபல நடிகரால் ஓலாவுக்கு நெருக்கடி
உங்க அடுத்த பிளான் என்ன? பிரபல நடிகரால் ஓலாவுக்கு நெருக்கடி
ADDED : அக் 18, 2024 12:55 PM

புதுடில்லி: வாடிக்கையாளர்களின் புகார் குறித்து அடுத்த திட்டம் என்ன என்று ஓலா நிறுவனத்திற்கு பிரபல நடிகர் குணால் கம்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓலா ஸ்கூட்டர்கள் சர்வீஸ் சென்டரில் அழுக்கு படிந்து குப்பை போல குவிக்கப்பட்டிருந்த போட்டோவை பகிர்ந்த காமெடி நடிகர் குணால் கம்ரா, சமூகவலைதளங்களில் அந்நிறுவனத்தின் குறைகளை வெளிப்படையாக சுட்டிக் காட்டினார். இதனால், கடுப்பான ஓலா நிறுவன தலைவர் பவிஷ் அகர்வாலும், 'உங்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கிறேன், நீங்கள் வந்து இந்த பிரச்னைகளை தீர்த்து தாருங்கள்,' கடுமையாக விமர்சித்து பதிலடி கொடுத்தார்.
இதையடுத்து, நடிகர் குணால் கம்ரா மற்றும் பவிஷ் அகர்வாலுக்கு இடையே தொடர்ந்து எக்ஸ் தளத்தில் வார்த்தைப் போர் நீடித்து வந்தது. தொடர்ந்து, கடந்த 4 மாதங்களில் ஓலா ஸ்கூட்டர் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு முழு இழப்பீடு வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி வரையிலான வாடிக்கையாளர்களின் குறைகள் தீர்க்கப்பட்டு விட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார்.
ஓலா நிறுவனம் மீது பிரபல நடிகர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால், அந்நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்தன. இந்த நிலையில், மீண்டும் ஓலா நிறுவனத்திற்குள் கேள்வி எழுப்பி, நடிகர் குணால் கம்ரா எக்ஸ் தளத்தில் டுவிட் போட்டுள்ளார். அதில்,'வாடிக்கையாளர்களின் புகார்கள் மற்றும் பணத்தை திருப்பி கொடுப்பது தொடர்பாக ஓலா நிறுவனம் தற்போது வரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
நிறுவனத்தின் அடுத்த திட்டம் என்ன என்பது கூட எங்களுக்கு தெரியாது. என்னை வேலைக்கு எடுப்பதை விட்டு விட்டு, அடுத்த திட்டம் என்ன என்பதை தெரியப்படுத்த வேண்டும்.' என்று ஓலா நிறுவனத்தின் உரிமையாளர் பவிஷ் அகர்வாலை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த சில தினங்களாக அமைதியாக இருந்து வந்த நடிகர் குணால் கம்ரா, தற்போது மீண்டும் கொளுத்தி போட்டிருப்பது ஓலா நிறுவனத்திற்கு புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.