இந்தியா வளர்ச்சி பாதையில் செல்லும் போது உலகம் பலனடைகிறது; ராஜ்நாத் சிங்
இந்தியா வளர்ச்சி பாதையில் செல்லும் போது உலகம் பலனடைகிறது; ராஜ்நாத் சிங்
ADDED : நவ 28, 2025 01:27 PM

புதுடில்லி: இந்தியா பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி பாதையில் செல்லும் போது உலகம் பல வகையில் பலனடைவதாக டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது; உலகப் பொருளாதாரத்தை நிலைத்தன்மையுடன் வைப்பதில் இந்தியா முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பானது, வெளிப்படையான, பாதுகாப்பான நிர்வாக மாதிரியை வழங்குகிறது. ஏஐ உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இந்தியாவின் அணுகுமுறை, பிற நாடுகள் எதிர்பார்க்கும் தரத்தைக் கொண்டுள்ளன.
உலகளாவிய அமைதியையும், மனித நலனை வலுப்படுத்தும் ஒரு நாடாக இந்தியா மாறி வருகிறது. எல்லை மற்றும் கடல் உள்கட்டமைப்புகளை பலப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பு மற்றும் அண்டை நாடுகளுடனான தொடர்புக்கு வழிவகுக்கிறது.
புதிய தளங்கள், தொழில்நுட்பம் மற்றும் கட்டமைப்புகள் மூலம் பாதுகாப்பு படை நவீனமயமாக்கப்படுகிறது. ஆத்மநிர்பர் மூலம் பாதுகாப்பு தொழில்துறைக்கு சாதகமான சூழலை உருவாக்குகிறோம், இவ்வாறு அவர் கூறினார்.

