செயற்கை மழை பெய்விப்பது எப்போது? மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் விளக்கம்
செயற்கை மழை பெய்விப்பது எப்போது? மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் விளக்கம்
ADDED : அக் 09, 2024 09:11 PM

விக்ரம்நகர்:“நகரில் காற்று மாசு உச்சக்கட்டத்தில் இருக்கும் வேளையில் செயற்கை மழை பெய்விக்க திட்டமிடப்பட்டது. இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரை அவசரமாகச் சந்திக்க வேண்டியுள்ளது,” என, மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:
தீபாவளி நெருங்கும் நிலையில், நவம்பர் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை காற்று மாசுபாடு கடுமையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் மாசு அளவை சமாளிக்க செயற்கை மழை போன்ற அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
காற்று மாசு உச்சமாக இருக்கும் வேளையில் செயற்கை மழை பெய்விப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும். இதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரை சந்திக்க வேண்டும். இதுதொடர்பாக ஆலோசனை கூட்டத்தை கூட்டும்படி கோரிக்கை விடுத்தேன். ஆனால் மத்திய அரசிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை.
அவசரக் கூட்டத்தை கூட்டும்படி மத்திய அமைச்சருக்கு நான் மீண்டும் ஒரு கடிதம் எழுதுவேன்.
காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் மாநில அரசு 21 அம்ச செயல்திட்டத்தை அறிவித்தது. அது செயல்படுத்துவது குறித்து இரண்டு கட்டுமான தளங்களை நான் ஆய்வு செய்தேன். 120 கட்டுமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினேன்.
இந்த குளிர்காலத்தில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கத்துடன் இந்த நிறுவனங்களுக்கு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
கட்டுமான நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய 14 வழிகாட்டுதல்களை விவரிக்கும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் குறித்து, தங்கள் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டன. அவர்களின் ஒத்துழைப்பு, காற்று மாசு அளவைக் குறைக்க உதவும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
அரசின் வழிகாட்டுதல்களை அமல்படுத்த, அரசாங்கம் ஏற்கனவே கட்டுமான தளங்களை ஆய்வு செய்யத் துவங்கியுள்ளது. அரசு உத்தரவை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. தினசரி ஆய்வுகள் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

