தங்கவயல் நகராட்சி தலைவர் தேர்தல் எப்போது? வழக்கு முடிவுக்கு பின் நடக்கும் என அமைச்சர் தகவல்
தங்கவயல் நகராட்சி தலைவர் தேர்தல் எப்போது? வழக்கு முடிவுக்கு பின் நடக்கும் என அமைச்சர் தகவல்
ADDED : பிப் 18, 2024 02:34 AM
பெங்களூரு, : கர்நாடகாவில் உள்ள தங்கவயல் உட்பட நகராட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர் தேர்தல் தாமதம் ஆவது ஏன் என்பதற்கு மேலவையில், நகராட்சித்துறை அமைச்சர் ரஹீம் கான் விளக்கம் அளித்துள்ளார்.
தங்கவயல், கோலார் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள நகராட்சிகளுக்கு இரண்டாம் கட்ட தலைவர் பதவிக் காலம் ஒன்பது மாதங்கள் கடந்தும், இன்னும் தேர்தல் நடத்தப் பட வில்லை. இதனால் நகர வளர்ச்சி பணிகள் கேட்பாரற்று உள்ளது.
தங்கவயல் நகராட்சி தலைவர் பதவியில் யாரும் இல்லாததால் நகராட்சி மாதாந்திர கூட்டமும் நடக்கவில்லை. வார்டுகள் பற்றிய பிரச்னைகளுக்கு தீர்வும் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக சட்ட மேலவையில் நடந்த விவாதம்:
காங்., - அனில் குமார்: நகராட்சிகளில் தலைவர் பதவிக்கு ஒன்பது மாதங்களாக தேர்தலே நடத்தப் படாமல்உள்ளது.
இதனால் நகர வளர்ச்சிப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எப்போது தலைவர் தேர்தல் நடத்தப்படும். இதற்கான ஜாதி ஒதுக்கீடு எப்போது அறிவிக்கப் படும்.
நகராட்சித்துறை அமைச்சர் ரஹீம் கான்: நகராட்சிகளுக்கு இரண்டாம் கட்ட தலைவர் பதவிக்கு, ஜாதி இட ஒதுக்கீடு அறிவித்ததில், சில குளறுபடிகள் இருப்பதாக, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. வழக்கு முடிவுக்கு வந்த பின்னர், ஜாதி இட ஒதுக்கீடு அறிவிக்கப்படும். அதன் பின்னரே, தேர்தல் நடத்தப்படும்.
அனில் குமார்: முதற்கட்ட தலைவர் பதவி காலம், இரண்டரை ஆண்டுகள் முழுமையாக முடிந்துள்ளது. இதனை அடுத்து இரண்டாம் கட்ட தலைவர் பதவிக்கு இரண்டரை ஆண்டுகள் பதவிக் காலம். இதில், ஏற்கனவே, ஒன்பது மாதம் கடந்து விட்டது.
இரண்டாம் கட்ட தலைவர் தேர்தலுக்கு பின், அவர்கள் பதவிக் காலம் இரண்டரை ஆண்டுகள் இருக்குமா.
அமைச்சர்: முதல் கட்டமாக தலைவர் பதவி ஏற்றதில் இருந்து நகராட்சி கவுன்சிலின் பதவிக் காலம் ஐந்தாண்டுகள் தான்.
ஒருநாள் கூட அதிகமாக நீடிக்க சட்டத்தில் இடம் இல்லை.