ADDED : டிச 20, 2024 10:33 PM
டில்லி சட்டசபைத் தேர்தலில் 70 வேட்பாளர்களை தேர்வு செய்ய 230 பெயர்களை பட்டியலிட்டு பா.ஜ., பரிசீலித்து வருகிறது. பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையிலான வேட்பாளர் தேர்வுக் குழு நேற்று முன் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியது.
கட்சியின் மத்திய பார்வையாளர்களால் 700 பேரை பரிந்துரை செய்திருந்தது. அதில் இருந்து 230 பேரை தேர்வு செய்ய ஆலோசனை நடந்து வருகிறது. அடுத்தகட்ட ஆலோசனை இன்று நடக்கிறது. இறுதிப் பட்டியலில் 225 முதல் 230 பேர் வரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களின் பட்டியல், கட்சியின் மத்திய தேர்தல் குழுவுக்கு இன்றே அனுப்பி வைக்கப்படுகிறது. மத்தியக் குழு அந்தப் பட்டியலைப் பரிசீலித்து, வேட்பாளர்ளை அடுத்த வாரம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியும் இதுவரை 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து விட்டது. ஆனால், பா.ஜ.,வில் மட்டுமே தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, வீரேந்திர சச்தேவா, “ஒரு தலைவர் அல்லது தலைவர்கள் குழு என மற்ற கட்சிகளைப் போல பா.ஜ.,வில் முடிவு எடுப்பதில்லை. கட்சியின் ஒவ்வொரு தொண்டருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்கும் உரிமை பா.ஜ.,வில் உண்டு. கட்சியின் விதிமுறைப்படிதான் ஒவ்வொரு கட்டமாக ஆலோசனை நடத்தி வேட்பாளர் தேர்வு செய்யப்படுவர். மூத்த தலைவர்கள், சமீபத்தில் கட்சியில் சேர்ந்த மற்ற கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் என வேட்பாளர்கள் பெயர் பரிசீலிக்கப்படுகிறது,”என்றார்.
முன்னாள் எம்.பி., பர்வேஷ் வர்மா, வீரேந்திர சச்தேவா, முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் வர்மா ஆகியோர் வேட்பாளராக களம் இறக்கப்படலாம் என தெரிகிறது. பட்பர்கஞ்ச், கிருஷ்ணா நகர் அல்லது கஸ்தூரிபா நகர் ஆகியவற்றில் ஒன்றில் சச்தேவாவை களம் இறக்க மேலிடம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.அதேபோல, கடந்த தேர்தலில் தோல்வி அடைந்த மூத்த தலைவர்களை மீண்டும் களம் இறக்கவும் பரிசீலனை நடக்கிறதாம். பா.ஜ.,வுக்கு தற்போதுள்ள ஏழு எம்.எல்.ஏ.,க்களில் சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில், பா.ஜ.,வில் சேர்ந்த அரவிந்தர் சிங் லவ்லி, ராஜ் குமார் சவுகான், கைலாஷ் கெலாட் மற்றும் ராஜ் குமார் ஆனந்த் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க மேலிட தலைவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

