காசிப்பூர் கழிவு மலை சீராவது எப்போது? இப்போதும் ரூ.489 கோடி ஒதுக்கீடு!
காசிப்பூர் கழிவு மலை சீராவது எப்போது? இப்போதும் ரூ.489 கோடி ஒதுக்கீடு!
ADDED : ஜூலை 18, 2025 08:23 PM

புதுடில்லி:டில்லி அருகே உள்ள காசிப்பூர் கழிவு மலை கொஞ்சம் கொஞ்சமாக கிழக்கு டில்லி நோக்கி பரவி வருவதால், அந்த குப்பை மலையை அகற்ற டில்லி மாநகராட்சி நிர்வாகம் தற்போது, 489 கோடி ரூபாயில் புதிய திட்டம் தீட்டியுள்ளது. எனினும், இதற்கு முன்னும் பல முறை இதுபோல திட்டங்களை செயல்படுத்தியும், காசிப்பூர் கழிவு மலை மேலும் உயர்ந்தே வருகிறது. இப்போது கூட தினமும், 2,000 டன் உயிரி கழிவுகள் அங்கேயே கொட்டப்படுகின்றன.
டில்லியின் கழிவுகள், டில்லி அருகே உள்ள உ.பி.,யின் காசிப்பூர் கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் கொட்டப்படுகின்றன. 70 ஏக்கர் நிலத்தில் துவங்கிய கழிவுகள் கொட்டும் பணி, 20 ஆண்டுகளுக்கு முன்பே சட்டப்படி முடிந்து விட்டது.
எனினும், இன்னமும் அந்த பகுதிக்கு கழிவுகள் வந்த வண்ணமாகவே இருக்கின்றன. இப்போது, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, அந்த கழிவு மலை தெற்கு டில்லியை நோக்கி பரவி வருகிறது.
அங்கு சேர்ந்துள்ள குப்பையை அகற்றி விட்டு, அந்த பகுதியை மீண்டும் மட்டமாக்கித் தருவதாக பல முறை கூறியும் இது வரை நடக்கவில்லை. அதுபோல, இத்தனை ஆண்டுகளுக்குள் இந்த கழிவு மலை சரியாகி விடும் என கூறியும், இதுவரை சரியாகவில்லை. பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியும், அந்தப் பணி இன்னமும் முடிவடையவில்லை.
இப்போது, 489 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ள டில்லி மாநகராட்சி நிர்வாகம் அந்த பணத்தை பயன்படுத்தி, புதிய இயந்திரங்கள் வாங்கி, அந்த பகுதியில் கழிவுகளை தேங்க விடாமல் செய்யப் போவதாக கூறியுள்ளது.
எனினும், இன்னமும், நாள்தோறும், 2,000த்திற்கும் அதிகமான டன் பிரெஷ் குப்பை கழிவுகள் அந்த பகுதியில் தொடர்ந்து போடப்படுகின்றன.
இதனால் அந்த பகுதியே வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறி வருகிறது.
'பயோமைனிங்' எனும் உயிரி வளர்ப்பு இடமாக, அந்த குப்பை கொட்டும் ஒரு இடம் மாற்றப்பட்டாலும், அடுத்த பகுதியில் இருந்து தொடர்ந்து வெளியேறும் புகை, அந்த பகுதியையே கபளிகரம் செய்து வருகிறது.
இதனால், அப்பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும் போது,'இதுபோல பல முறை டில்லி அரசு, காசிப்பூர் குப்பை மலையை சரி செய்து, மட்டமாக்கி கொடுத்து விடும் என நம்பிக்கை கொண்டிருந்தோம்.
'ஆனால், ஒவ்வொரு முறையும் அந்த பணி நடந்ததே தவிர, குப்பை கொட்ட வேறு இடம் ஒதுக்காததால், அந்த பகுதியிலேயே மீண்டும் மீண்டும் குப்பையை கொட்டி வருகின்றனர்.
'இதனால், இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், காசிப்பூர் குப்பை கொட்டும் இடத்தின் நிலை மட்டும் மாறப் போவதில்லை. நாங்களும் புகையில் கிடந்து சாகத் தான் வேண்டும். வேறு வழியில்லை' என்றனர்.
டில்லியில் சேரும் குப்பையை, காசிப்பூர் போன்ற பகுதிகளுக்கு அனுப்பாமல் தடுத்தால் தான், அந்த பகுதி இன்னும் 10 - 15 ஆண்டுகளில் சரியாக வாய்ப்பு உள்ளது.