ADDED : மே 27, 2025 12:25 AM

சத்தீஸ்கரின் நாராயண்புர் மாவட்டத்தில், மே 21ம் தேதி நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கைகளில், 28 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். இதில் நக்சலைட் அமைப்பின் முக்கியத் தலைவரான பசவராஜு, 70, அடங்குவார்.
நக்சலைட் அமைப்பின் பொதுச் செயலராக இருந்த முப்பாலா லட்சுமண ராவ், வயது மூப்பு காரணமாக பதவி விலகினார்.
அதைத் தொடர்ந்து, 2017ல் அந்த பதவிக்கு வந்தவர் பசவராஜூ. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், அங்கேயே பள்ளி படிப்பை முடித்தார். வாரங்கல் ஆர்.இ.சி.,யில் எம்.டெக்., படிப்பில் சேர்ந்த அவர், பாதியில் வெளியேறினார்.
287 நக்சலைட்கள்
மாணவ பருவத்திலேயே நக்சலைட் அமைப்பினரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அதில் இணைந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் நக்சலைட் அமைப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டு வருகிறது.
சத்தீஸ்கரின் பஸ்தார் பிராந்தியத்தில், குறிப்பாக நாராயண்புர், சுக்மா, கான்கெர் உள்ளிட்ட பகுதிகளில் நக்சலைட்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர்.
கடந்தாண்டு மட்டும், பாதுகாப்புப் படையினருடனான சண்டை மற்றும் நடவடிக்கைகளில், 14 முக்கிய தலைவர்கள் உட்பட, 287 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதே நேரத்தில், 800 பேர் சரணடைந்தனர். கடந்த, 20 ஆண்டுகளில், 5,000 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்.
மாவோயிஸ்ட் மத்தியக் குழுவில், தற்போது, 15 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அமைதி பேச்சுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், எவ்வித நிபந்தனையும் இல்லாமல் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது.
பஸ்தார் மற்றும் ஜார்க்கண்டின் வனப்பகுதிகள், பீஹார், ஒடிசா ஆகிய பகுதிகளில் மட்டுமே, அமைப்புக்கு புதிய உறுப்பினர்களை நக்சலைட் அமைப்புகளால் சேர்க்க முடிகிறது.
நக்சலைட் அமைப்பு எப்போதும் ஒரு அடி முன்னேறினால் நான்கு அடி பின்னே வரும்.
பொதுவான தலைவர்
கடந்த, 1970, 1980களில் அமுல்யா சென், கனாய் சாட்டர்ஜி, சாரு மஜும்தார், ஜன்கல் சந்தல் என, பல முக்கிய நக்சல் தலைவர்கள் கொல்லப்பட்டனர். அப்போது, நக்சலைட் அமைப்பு முடிவுக்கு வந்துவிட்டதாக பேசப்பட்டது.
ஆனால், அதன்பின் நாட்டின் பல பகுதிகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நக்சலைட் அமைப்புகள் செயல்பட்டு வந்தன. கடந்த, 2004 நிலவரப்படி, ஒன்பது மாநிலங்களில், 150 மாவட்டங்களில் நக்சலைட்கள் செயல்பட்டு வந்தனர்.
தற்போது இந்த எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. வளர்ச்சி திட்டங்கள், வேலை வாய்ப்புகள் உருவாக்கம் என, மத்திய, - மாநில அரசுகளின் நடவடிக்கைகளால், நக்சலைட் செயல்பாடு மட்டுப் படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் சுதந்திரத்துக்குப் பின், வடகிழக்கு மாநிலங்களில் செயல்பட்டு வந்த, பல பிரிவினைவாத அமைப்புகள், குழுக்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
ஆனால், அதுபோன்ற ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை நக்சல்கள் விவகாரத்தில் எடுக்க முடியாது. காரணம், பொதுவான நோக்கம், கொள்கை இருந்தாலும், நக்சலைட்களில் பொதுவான தலைவர் என்று யாரும் இல்லை.
அந்தந்த பகுதிகளில், தனித்தனி குழுக்களாக இவர்கள் செயல்பட்டு வருகின்றனர். அதற்கேற்ப, இவர்களுடன் பேச்சு நடத்துவது தொடர்பான முயற்சிகளில் மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நமது சிறப்பு நிருபர் -