வந்தே பாரத், சதாப்தி விரைவு ரயில் வேகம் எப்போது அதிகரிக்கும்?
வந்தே பாரத், சதாப்தி விரைவு ரயில் வேகம் எப்போது அதிகரிக்கும்?
ADDED : டிச 07, 2024 11:15 PM

பெங்களூரு: சென்னை - பெங்களூரு இடையேயான வந்தே பாரத், சதாப்தி விரைவு ரயிலின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ., செல்லும் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததால், சென்னை - பெங்களூரு பயண நேரம் முறையே 20 மற்றும் 25 நிமிடங்கள் குறையும் வாய்ப்பு உள்ளது.
ஆட்டோமொபைல் மையமான சென்னையில் இருந்து தகவல் தொழில்நுட்ப மையமான பெங்களூருக்கு தினமும் சதாப்தி, வந்தே பாரத் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில், சென்னை - பெங்களூரு இடையேயான 359 கி.மீ., துாரத்தை கடக்க காலையில் இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயில் 5 மணி நேரமும்; மாலையில் 5 மணி 10 நிமிடமும் எடுத்து கொள்கின்றன. வந்தே பாரத் விரைவு ரயிலில், காலையில் 4 மணி 25 நிமிடங்களும்; மாலையில் 4 மணி 35 நிமிடங்களும் ஆகிறது.
இவ்விரு ரயில்களும், 110 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இரு நகரங்களுக்கு இடையே பயண நேரத்தை குறைக்கவும்; ரயில் வேகத்தை அதிகரிக்கவும் பயணியர் வலியுறுத்தினர்.
இதையடுத்து, தென்மேற்கு ரயில்வே, பெங்களூரில் இருந்து ஜோலார் பேட்டை இடையே 130 கி.மீ., வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது.
இரு ரயில்களின் வேகத்தை அதிகரிக்க, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், ஒப்புதல் அளித்தால், விரைவில் 130 கி.மீ., வேகத்தில் இவ்விரு வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும்.
இதன் மூலம், பயண நேரத்தில் சதாப்தி விரைவு ரயிலில் 20 நிமிடங்களும்; வந்தே பாரத் ரயிலில் பயண நேரம் 25 நிமிடங்களும் குறையும். இதனால் தினசரி பயணியர், வர்த்தகத்துக்காக பயணிப்போருக்கு அனுகூலமாக இருக்கும். இத்திட்டம் எப்போது முதல் அமலுக்கு வரும் என பல தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.