நீங்கள் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் எங்கே?: மோடிக்கு கார்கே கேள்வி
நீங்கள் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் எங்கே?: மோடிக்கு கார்கே கேள்வி
ADDED : ஏப் 24, 2024 12:56 PM

திருவனந்தபுரம்: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.15 லட்சம், வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணம் மீட்பு, விவசாயிகளின் இரட்டிப்பு வருமானம் என முந்தைய தேர்தல்களில் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளின்படி, அந்த பணம், இரட்டிப்பு வருமான எங்கே என காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக கேரளாவில் செய்தியாளர்களிடம் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார். அதனால்தான் அவர் எப்போதும் காங்கிரசை விமர்சித்து வருகிறார். காங்கிரஸ் என்ற கட்சியே இல்லை என கூறிவரும் அவர், பிறகு எதற்காக எங்கள் கட்சியை பற்றி கவலைப்பட வேண்டும்? வெற்றிப்பெறுவோம் என பா.ஜ.,வுக்கு அதிக நம்பிக்கை இருந்தால், எதற்காக ஊழல்வாதிகளை பா.ஜ., கட்சியில் சேர்க்கிறீர்கள்? அவர்கள் காங்கிரசிலோ அல்லது வேறு ஏதாவது கட்சியிலோ இருந்தால் அவர்களை பெரிய ஊழல்வாதிகள் எனக் கூறுவார்கள்.
நரேந்திர மோடி, நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.15 லட்சம் தருவதாக கூறினார்; காங்கிரஸ் கட்சியினர் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீட்டு கொண்டுவருவேன் என்றார். அந்த பணமெல்லாம் எங்கே? அடுத்த தேர்தலில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக கூறினார். விவசாயிகளின் இரட்டிப்பு வருமானம் எங்கே? தற்போது மோடியின் கியாரன்டி என பேசி வருகிறார். தாங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டோம் என்பதே மோடியின் கியாரண்டி. இவ்வாறு அவர் கூறினார்.

