விக்ரம் கவுடாவுடன் இருந்த நக்சல்கள் எங்கே?: வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை
விக்ரம் கவுடாவுடன் இருந்த நக்சல்கள் எங்கே?: வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை
ADDED : நவ 21, 2024 05:19 AM

உடுப்பி; என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நக்சல் இயக்க தலைவர் விக்ரம் கவுடாவின் மனைவி மற்றும் தப்பியோடிய நக்சல்களை, 20 தனிப்படையினர் தேடி வருகின்றனர். சிக்கமகளூரு பகுதியில் பதுங்கியுள்ள எட்டு நக்சல்களை பிடிக்கவும் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
உடுப்பி, ஹெப்ரி கூட்லு நட்வலு கிராமத்தை சேர்ந்தவர் விக்ரம் கவுடா, 46; நக்சல் இயக்க தலைவர். இவர் மீது கர்நாடகா, தமிழகம், கேரளாவில் 60 வழக்குகள் உள்ளன. மூன்று மாநில நக்சல் ஒழிப்பு படையினர், போலீசார் இவரை 20 ஆண்டுகளாக தேடி வந்தனர். கடந்த 18ம் தேதி இரவு, ஹெப்ரி அருகே கபினாலு வனப்பகுதியில் விக்ரம் கவுடாவை, நக்சல் ஒழிப்பு படையினர், 'என்கவுன்டரில்' சுட்டுக் கொன்றனர்.
உடல் தகனம்
விக்ரம் கவுடாவின் உடல், பிரேத பரிசோதனைக்காக, உடுப்பி மணிப்பால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று மதியம் அவரது உடல், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சொந்த ஊரான கூட்லு நட்வலுவில் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக விக்ரம் கவுடா உடலை பார்த்து, 'எங்களுக்காக போராட்டம் நடத்தினார். அவரது இறப்பை தாங்க முடியவில்லை' என்று கூறி, கிராம மக்கள் கண்ணீர் வடித்தனர்.
இதற்கிடையில், விக்ரம் கவுடா என்கவுன்டர் செய்யப்பட்ட போது, அவருடன் இருந்த ஒரு பெண் உட்பட இரண்டு நக்சல்கள், வனப்பகுதிக்குள் தப்பினர். தப்பிய பெண், நக்சல் விக்ரம் கவுடாவின் மனைவி சுந்தரி என்பது தெரியவந்துள்ளது. அவரையும், அவருடன் தப்பி சென்றவரையும் பிடிக்க, வனப்பகுதியில் 20 குழுவினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
ஹோட்டல் வேலை
விக்ரம் கவுடா, எப்படி நக்சல் அமைப்பில் சேர்ந்தார் என்பது பற்றி, தகவல் வெளியாகி உள்ளது. நான்காம் வகுப்பு மட்டுமே படித்த விக்ரம் கவுடா, வீட்டின் அருகே உள்ள பாக்கு தோட்டத்தில் வேலை செய்தார். பின், மும்பைக்கு சென்று ஏழு ஆண்டுகள் ஹோட்டலில் வேலை செய்துள்ளார்.
மறுபடியும் ஊர் திரும்பியவர், ஹெப்ரியில் ஹோட்டலில் வேலை செய்தார். பின், மீண்டும் மும்பைக்கு சென்று ஊருக்கு திரும்பினார். மும்பையில் வசித்த போது, எப்படியோ அவருக்கு நக்சல்களுடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. வனப்பகுதியில் வசிக்கும் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக, நக்சலாக மாறி குரல் கொடுத்தார்.
குதிரேமுகா வனப்பகுதி ஆக்கிரமிப்பு விவகாரத்தில், போராட்டத்தை முன்நின்று நடத்தினார். அரசுக்கு எதிராக செயல்பட்டதால், அவரை பிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவர் சிக்கவில்லை. கர்நாடகா மட்டுமின்றி தமிழகம், கேரளாவிலும் நக்சல் நடவடிக்கையில் ஈடுபட்டதால், அந்த மாநில நக்சல் ஒழிப்பு படையினரும் தேடினர்.
காதல் திருமணம்
கடந்த 20 ஆண்டுகளாக யார் கையிலும் சிக்காமல், வனப்பகுதியில் வாழ்ந்து வந்தார். விக்ரம் கவுடாவுடன் இருந்த நக்சலான தினகர் என்பவர், சில ஆண்டுகளுக்கு முன் என்கவுன்டரில் பலியானார். விக்ரம் கவுடா, சுந்தரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வந்து, ஜெயந்த் கவுடா என்பவர் வீட்டில், சமையல் பொருட்களை வாங்கி சென்று உள்ளார்.
இது பற்றி நக்சல் ஒழிப்பு படையினருக்கு தகவல் சென்றது. ஜெயந்த் கவுடா மூலம் விக்ரம் கவுடாவை, வனப்பகுதியில் இருந்து வெளியே வரவழைத்து உள்ளனர். அதற்கு முன், ஜெயந்த் கவுடா குடும்பத்தை, அங்கிருந்து அனுப்பி விட்டனர். கடந்த 18ம் தேதி ஜெயந்த் கவுடா வீட்டிற்கு வந்த விக்ரம் கவுடாவை, நக்சல் ஒழிப்பு படையினர் சுற்றி வளைத்து உள்ளனர். சரண் அடையும்படி எச்சரித்து உள்ளனர்.
'உயிரை வேண்டும் என்றாலும் விடுகிறேன். சரண் அடைய மாட்டேன்' என்று கூறி உள்ளார். பின், நாட்டு துப்பாக்கியால் நக்சல் ஒழிப்பு படையினரை நோக்கி சுட்டுள்ளார். இதனால், தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள, விக்ரம் கவுடாவை, நக்சல் ஒழிப்பு படையினர் என்கவுன்டர் செய்தது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில், விக்ரம் கவுடாவின் குழுவில் உள்ள, லதா என்ற பெண் நக்சலும், அவரது கூட்டாளிகள் சிலரும் சிக்கமகளூரு மூடிகெரே வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக, நக்சல் ஒழிப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அவர்களை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. நக்சல்கள் தேடுதல் வேட்டையால் மூடிகெரே, ஹெப்ரி வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
சன்மானம்
விக்ரம் கவுடா என்கவுன்டர் குறித்து, முதல்வர் சித்தராமையா நேற்று கூறுகையில், ''விக்ரம் கவுடா இருக்கும் இடம் குறித்து தகவல் அளிப்போருக்கு 25 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என்று கேரள அரசும்; 5 லட்சம் ரூபாய் சன்மானம் என்று, கர்நாடக அரசும் அறிவித்து இருந்தது. அவர் சரணடைய மறுத்ததாலும், நக்சல் ஒழிப்பு படையினரை நோக்கி, துப்பாக்கியால் சுட்டதாலும் என்கவுன்டர் செய்யப்பட்டார்,'' என்றார்.