எங்கே செல்லும் இந்த பாதை...? சுமலதாவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி
எங்கே செல்லும் இந்த பாதை...? சுமலதாவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி
ADDED : மார் 14, 2024 10:19 PM

- நமது நிருபர் -'ரெபல் ஸ்டார்' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் கன்னட நடிகர் அம்பரீஷ். மாண்டியா மாவட்டம், மத்துார் தாலுகா தொட்டஅரிசினகெரே கிராமத்தை சேர்ந்தவர். நடிகராக ஜொலித்தவர் அரசியலிலும் வெற்றி கண்டார்.
காங்கிரஸ் கட்சியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர். இரண்டு முறை மாண்டியா எம்.பி.,யாகவும் மத்திய மற்றும் மாநில அமைச்சராகவும் இருந்துள்ளார். ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்த அம்பரீஷ், அனைத்து கட்சி தலைவர்களுடன் நட்புடன் இருந்தார்.
சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், தன் 66வது வயதில், 2018ம் ஆண்டு நவம்பர் 24ல் மரணம் அடைந்தார். அப்போது முதல்வராக இருந்த குமாரசாமி, பெங்களூரில் இருந்து மாண்டியாவுக்கு அவரது உடலை, ஹெலிகாப்டரில் எடுத்து செல்லவும், மாண்டியாவில் இறுதிச்சடங்கு நடத்தவும், தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்.
இந்நிலையில், 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் அம்பரீஷின் மனைவியும், நடிகையுமான சுமலதா, காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பினார்.
அப்போது காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி ஆட்சி இருந்ததால், சுமலதாவுக்கு சீட் கொடுக்க, காங்கிரஸ் மறுத்து விட்டது. முதல்வராக இருந்த குமாரசாமியின் மகன் நிகில், மாண்டியா தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளராக, களம் இறக்கப்பட்டார்.
இதனால் விரக்தியான சுமலதா, சுயேச்சையாக போட்டியிட்டார். அவருக்கு பா.ஜ., ஆதரவு அளித்தது. சுமலதாவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று, பிரதமர் மோடியே பிரசாரம் செய்தார்.
அந்த நேரத்தில் மாண்டியா தேர்தல் களத்தில், அனல் பறக்கும் விவாதங்கள் நடந்தன. 'அம்பரீஷின் உடலை அடக்கம் செய்ய உதவி செய்தேன். அந்த நன்றியை சுமலதா மறந்து விட்டார்' என்று, குமாரசாமி குற்றம் சாட்டினார்.
மடிப்பிச்சை கேட்கிறேன்
இதற்கு பதிலடி கொடுத்த சுமலதா, 'என் கணவர் மரணத்திலும், குமாரசாமி அரசியல் செய்கிறார்' என்றார். இதனால் சுமலதா, குமாரசாமி இடையில் நீயா, நானா போட்டி அரங்கேறியது. பிரசார மேடையில் பேசிய சுமலதா, 'நான் யார், உங்க மருமகள், இந்த மண்ணின் மருமகள், அம்பரீஷின் மனைவி, அபிஷேக்கின் தாய்.
உங்களிடம் ஓட்டு கேட்டு வரவில்லை. மடி பிச்சை கேட்டு வந்து இருக்கிறேன். உங்கள் மருமகளை ஆசிர்வதியுங்கள்' என்றார். 'என் பிரசாத்திற்கு தடை விதிக்க, மின் இணைப்பை துண்டிக்கின்றனர்' என்றும் குற்றம்சாட்டினார்.
பதிலுக்கு குமாரசாமி. 'நான் மாண்டியாவின் சேவகன், என் மகனை ஆசிர்வதியுங்கள்' என்றார். சுமலதாவுக்கு ஆதரவாக நடிகர்கள் யஷ், தர்ஷன் பிரசாரம் செய்தனர். காங்கிரசில் இருந்த அம்பரீஷ் ஆதரவாளர்கள், சுமலதாவை ஆதரித்தனர். இதனால் நிகிலை 1,25,876 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, சுமலதா எம்.பி., ஆனார்.
பா.ஜ., ஆதரவுடன் வெற்றி பெற்றதால், எம்.பி., ஆனது முதல் அக்கட்சியுடன் நெருக்கம் காட்டினார். பா.ஜ.,விலும் இணைய முயன்றார். ஆனால் சில காரணங்களால், பா.ஜ.,வில் இணைய முடியவில்லை. இந்நிலையில் வரும் லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிட, அனைத்து ஏற்பாடுகளையும் சுமலதா செய்து வந்தார்.
ஆனால், இம்முறை பா.ஜ.,வுடன், ம.ஜ.த., கூட்டணி அமைத்தது. மாண்டியா தொகுதியை தங்களுக்கு தரும்படி, ஆரம்பத்தில் இருந்தே பா.ஜ., தலைவர்களிடம், ம.ஜ.த., குமாரசாமி கேட்டு வந்தார். ஆனால் ம.ஜ.த.,வுக்கு, மாண்டியாவை விட்டு தர, பா.ஜ., தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முதல்வர் முயற்சி
கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதால், மாண்டியாவை விட்டு கொடுத்து, பெங்களூரு வடக்கில் போட்டியிடும்படி, சுமலதாவிடம், கர்நாடகா பா.ஜ., தலைவர்கள் வலியுறுத்தினர்.
'எக்காரணம் கொண்டும் மாண்டியாவை விட்டு தர மாட்டேன்' என்று, சுமலதா பிடிவாதம் பிடித்தார். பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் நட்டாவை நேரில் சந்தித்து, மாண்டியா சீட்டை தனக்கு ஒதுக்க வேண்டும் என்றும், கோரிக்கை வைத்தார். 'எனக்கு 100க்கு 100 சதவீதம் மாண்டியா சீட் கிடைக்கும்' என்றும், நம்பிக்கையுடன் கூறி வந்தார்.
இதற்கிடையில், சுமலதாவை காங்கிரசுக்கு அழைத்து வர, முதல்வர் சித்தராமையா முயற்சி செய்தார். அவரை மாண்டியா காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கவும் நினைத்தார். ஆனால், சுமலதா பிடிகொடுக்கவில்லை. சில காங்கிரஸ் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஓட்டுகள் பிரியும்
இந்நிலையில், நேற்று முன்தினம் ஹாசனில் நடந்த கூட்டத்தில் குமாரசாமி பேசுகையில், 'லோக்சபா தேர்தலில் மாண்டியா, ஹாசன், கோலார் தொகுதிகளை நமக்கு கொடுப்பதாக, பா.ஜ., தலைவர்கள் கூறி உள்ளனர்' என்றார்.
இதன்மூலம் மாண்டியா தொகுதி ம.ஜ.த.,வுக்கு என்று உறுதியாகி விட்டது. பெங்களூரு வடக்கு தொகுதியிலும், மத்திய இணை அமைச்சர் ஷோபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு விட்டார்.
இனிமேல் காங்கிரசக்கு சுமலதா சென்றாலும், எந்த பிரயோஜனமும் இல்லை. மாண்டியா காங்., வேட்பாளராக 'ஸ்டார்' சந்துரு அறிவிக்கப்பட்டு விட்டார். இதனால் கடந்த தேர்தல் போல, இம்முறையும் சுமலதா சுயேச்சையாக போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் சுயேச்சையாக போட்டியிட்டால், கடந்த முறை போல இம்முறை அவரது வெற்றி எளிதாக இருக்காது.
பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணிக்கு அந்த கட்சி ஓட்டுகளும், காங்கிரசுக்கு அந்த கட்சியின் ஓட்டுகளும் கிடைக்கும். ஓட்டுகள் பிரிவதால் சுமலதா வெற்றி பெறுவது கடினம் தான். இதனால், அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

