ADDED : ஜன 14, 2024 03:08 AM

புதுடில்லி: பிரதமர் மோடியிடம் ஒரு பழக்கம் உள்ளது. தனக்கு உதவி செய்தோருக்கு பதவிகள் வழங்கி கவுரவிப்பார். ஒரு சிலரை எம்.பி.,யாக்கி அழகு பார்த்துள்ளார்.
தற்போது மோடியின் இந்த பட்டியலில் இருப்பவர், ஹர்ஷ்வர்த்தன் சிருங்கலா. இவர், வெளியுறவுத்துறை செயலராக பணியாற்றியவர். அமெரிக்கா உட்பட பல நாடுகளில், இந்திய துாதராக இருந்துள்ளார்.
கடந்தாண்டு டில்லியில் நடைபெற்ற, 'ஜி-- - 20' மாநாட்டின் ஒருங்கிணைப்பாள ராக இருந்து, அந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்த உதவியவர்; இவர் மீது மோடிக்கு தனி பாசம்.
வரும் லோக்சபா தேர்தலில் இவர் பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என, கூறப்படுகிறது. பா.ஜ., வெற்றி பெற்று, மோடி மீண்டும் பிரதமரானால், இவர் வெளியுறவுத்துறையின் இணை அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாம். 'ஜெய்சங்கருக்கு அடுத்து இவர் பிற்காலத்தில் வெளியுறவுத்துறையின் கேபினட் அமைச்சர் ஆவார்' என்கின்றனர்.
'பா.ஜ.,வை பொறுத்தவரை, ஒருவருக்கு பின் அடுத்தவர் யார் என்பதை, முன்பே தேர்ந்தெடுப்பது வழக்கம்' என்கின்றனர் கட்சி சீனியர்கள்.