எட்டு மாவட்ட தலைவர்கள் யார்? அறிவிப்பதில் பா.ஜ., தயக்கம்!
எட்டு மாவட்ட தலைவர்கள் யார்? அறிவிப்பதில் பா.ஜ., தயக்கம்!
ADDED : பிப் 16, 2025 10:37 PM

பெங்களூரு : கட்சிக்குள் ஏற்பட்டு இருக்கும் பூசலால், எட்டு மாவட்ட தலைவர்கள் பெயரை அறிவிப்பதில், பா.ஜ., தயக்கம் காட்டுகிறது.
கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திராவுக்கு எதிராக, கட்சியின் மூத்த எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தலைமையில் ஒரு அணி உருவாக்கி இருக்கும் நிலையில், தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று மேலிடம் அறிவித்தது.
இதனால், எத்னால் அணியினர் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டினர். ஆனால் தேர்தல் நடத்தினால் ஏதாவது பிரச்னை ஏற்படலாம் என்று கருதி, மேலிடம் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது.
இதற்கிடையில் கட்சி அமைப்புரீதியாக பா.ஜ.,வின் 31 மாவட்டங்களுக்கு, புதிய தலைவரை தேர்ந்து எடுக்க, தொண்டர்களிடம் ஆதரவு கேட்கப்பட்டது. முதற்கட்டமாக 23 மாவட்ட பா.ஜ., தலைவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
சிக்கபல்லாபூர் மாவட்ட தலைவராக சந்தீப் ரெட்டி நியமிக்கப்பட்டதற்கு, எம்.பி.சுதாகர் எதிர்ப்பு தெரிவித்தார். விஜயேந்திராவையும் கடுமையாக சாடினார்.
இந்த பிரச்னையை மேலிடம் கவனத்திற்கு கொண்டு சென்று, சந்தீப் ரெட்டி நியமனத்தையும் நிறுத்தி வைத்தார்.
இதனால் மேலும் எட்டு மாவட்டங்களுக்கு, தலைவர்கள் பெயர்களை அறிவிப்பதில் பா.ஜ.,வில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
தலைவராக அறிவிக்கப்படுவோர் மீது யாருக்காவது அதிருப்தி இருந்தால், அவர்கள் எத்னால் அணி பக்கம் சென்று விடுவரோ என்று விஜயேந்திராவுக்கு பயம் ஏற்பட்டு உள்ளது. தற்காலிகமாக தலைவர் பெயர்களை அறிவிப்பதை நிறுத்தி வைத்துள்ளார்.
இதற்கிடையில், துமகூரில் விஜயேந்திரா நேற்று அளித்த பேட்டியில், ''பசனகவுடா பாட்டீல் எத்னாலுக்கு, கட்சியின் மத்திய ஒழுங்கு குழு நோட்டீஸ் அளித்து 72 மணி நேரத்திற்குள், விளக்கம் அளிக்கும்படி கூறி உள்ளது.
''எல்லாவற்றுக்கும் வரும் 20ம் தேதிக்குள் ஒரு முடிவு கிடைக்கும். எந்த நேரத்திலும் மேலிட தலைவர்கள் இங்கு வரலாம். எனது தந்தை எடியூரப்பா பாணியில் நான் பணியாற்றி வருகிறேன்.
''எனது இலக்கு கட்சியை ஆட்சிக்கு கொண்டு வருவது தான். கடந்த ஒரு ஆண்டில் நிறைய பாடங்கள் கற்று உள்ளேன்,'' என்றார்.