யோகேஸ்வருக்கு துரோகம் செய்தது யார்? குமாரசாமிக்கு பாலகிருஷ்ணா கேள்வி
யோகேஸ்வருக்கு துரோகம் செய்தது யார்? குமாரசாமிக்கு பாலகிருஷ்ணா கேள்வி
ADDED : நவ 01, 2024 11:15 PM

ராம்நகர்; ''காங்கிரஸ் வேட்பாளர் யோகேஸ்வருக்கு, மத்திய அமைச்சர் குமாரசாமி துரோகம் செய்யவில்லையா,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா கேள்வி எழுப்பி உள்ளார்.
ராம்நகரின் மாகடியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சென்னப்பட்டணா காங்கிரஸ் வேட்பாளர் யோகேஸ்வர் மண்ணின் மைந்தன். இதனால் அவருக்கு செல்லும் இடங்களில் வரவேற்பு உள்ளது. கடந்த இரண்டு தேர்தலிலும் அநியாயமாக தோற்று போனார்.
இம்முறை அவரை கட்சி, பேதம் பார்க்காமல் வெற்றி பெற வைப்போம் என்று மக்கள் கூறி உள்ளனர். அவரது வெற்றி, 100 சதவீதம் உறுதி.
இரண்டு முறை தோற்றுவிட்டேன் என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்று, நிகில் கண்ணீர் வடிக்கிறார்.
அவர் இரண்டு முறையும் சென்னப்பட்டணாவில் தோற்று போகவில்லை. மாண்டியா, ராம்நகரில் தோற்றார்.
எந்த தொகுதியில் தோற்றோமோ, அதே தொகுதியில் வேலை செய்து வெற்றி பெற வேண்டும். அதை விட்டுவிட்டு தேர்தலுக்கு தேர்தல், தொகுதி மாறுவது, கண்ணீர் வடிப்பது வெற்றியை பெற்றுக் கொடுக்காது.
நிகில் தோற்க வேண்டும் என்று காங்கிரஸ் சதி செய்வதாக, குமாரசாமி கூறுகிறார். அரசியல் என்றாலே சதிதான். பெங்களூரு ரூரலில் சுரேஷை தோற்கடிக்க, மஞ்சுநாத்தை அழைத்து வரவில்லையா. அது சதி இல்லையா.
மஞ்சுநாத்தின் வெற்றிக்காக பாடுபட்ட யோகேஸ்வருக்கு, சென்னப்பட்டணா சீட்டை குமாரசாமியே வாங்கி கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால் எதிர்ப்பு தெரிவித்தார். இது யோகேஸ்வருக்கு செய்த சதி இல்லையா. குமாரசாமி மகனுக்கு எதிராக நாங்கள் அரசியல் செய்யக்கூடாதா.
சென்னப்பட்டணா மக்கள், குமாரசாமிக்கு என்ன குறை வைத்தனர்.
இரண்டு முறை அவரை வெற்றி பெற செய்து, ஒருமுறை முதல்வர் பதவியும் வாங்கி கொடுத்தனர். ஆனால் அனைத்தையும் மறந்து விட்டு சுயநலத்துக்காக மாண்டியாவுக்கு சென்றது ஏன்.
மாண்டியாவில் போட்டியிட புட்டராஜு தயாராக இருந்தார். ஆனால் மத்திய அமைச்சராக வேண்டும் என்ற ஆசையில், மாண்டியாவில் குமாரசாமி போட்டியிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடியின் முன்பு, நான் மட்டும் தான் வலுவான ஒக்கலிக சமூக தலைவர் என்று காட்டி கொள்ளும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். இதனால் பா.ஜ.,வில் இருக்கும் ஒக்கலிக தலைவர்களை துரத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.