குவிந்தன 1.25 கோடி மனுக்கள்: கூட்டுக்குழு எம்.பி., அதிர்ச்சி; வெளிநாட்டினர் கைவரிசை என சந்தேகம்
குவிந்தன 1.25 கோடி மனுக்கள்: கூட்டுக்குழு எம்.பி., அதிர்ச்சி; வெளிநாட்டினர் கைவரிசை என சந்தேகம்
UPDATED : செப் 28, 2024 11:21 AM
ADDED : செப் 28, 2024 09:38 AM

புதுடில்லி: வக்பு வாரிய சட்டதிருத்தம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட பார்லி கூட்டுக்குழுவுக்கு 1.25 கோடி கருத்துகள் வந்துள்ளன. இதில் வெளிநாட்டினர் பங்கு இருக்கலாம் என பா.ஜ., எம்.பி., நிஷிகாந்த் துபே சந்தேகம் தெரிவித்துள்ளார். இதற்கு காங்., கண்டனம் தெரிவித்து உள்ளது.
சட்ட மசோதா
வக்பு வாரியச் சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில், புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. விவாதத்தின் மீது மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்பி பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனையடுத்து வக்பு சட்டத்திருத்த மசோதா பார்லி., கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைத்தனர்.
1.25 கோடி கருத்துகள்
இந்த குழுவுக்கு பா.ஜ., எம்.பி., ஜகதாம்பிகா பால் தலைமையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குழுவினர் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு வருகின்றனர். பொது மக்கள், தொண்டு நிறுவனங்கள், நிபுணர்கள் தங்களது கருத்துகளை இமெயில் மூலம் தெரிவிக்கலாம் என அந்தக்குழு கூறியிருந்தது. அந்த வகையில் 1.25 கோடி கருத்துகள் இமெயில் மூலம் வந்துள்ளன. இந்தளவுக்கு கருத்துகள் வரும் என பார்லி கூட்டுக்குழுவே எதிர்பார்க்கவில்லை.
சந்தேகம்
இதில் சந்தேகம் தெரிவித்து ஜகதாம்பிகா பாலுக்கு, பா.ஜ., எம்.பி., நிஷிகாந்த் துபே அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:கூட்டுக்குழுவுக்கு வந்த பதில்கள் முன் எப்போதும் இல்லாதது. உலக சாதனை படைத்து உள்ளது. இதன் பின்னணியில் சீனா, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., மற்றும் ஜாகிர்நாயக் போன்றவர்களின் பங்கு இருக்க வாய்ப்பு உள்ளது.
ஜனநாயக நடவடிக்கையை கெடுக்கும் நோக்கில் அதிக பதில் அனுப்ப வெளிநாட்டு அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் ஈடுபடலாம் என்ற சந்தேகம் உள்ளது. பதில்கள் அனைத்தும் எங்கிருந்து வருகிறது என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
கற்பனை
இதற்கு பதிலளித்து அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: இந்தளவு பதில் வரும் என எதிர்பார்த்தது தான். உண்மையில் பார்லி கூட்டுக்குழுவுக்கு 1.25 கோடி கருத்துகள் வந்துள்ளதாக குறைத்து கூறுகின்றனர். 3.7 கோடி முஸ்லிம்கள், எங்கள் சார்பில் கருத்துகளை அனுப்பி உள்ளனர். மற்ற முஸ்லிம் அமைப்புகளும் வக்பு வாரிய சட்ட திருத்தம் குறித்து கருத்துகளை அனுப்பி உள்ளனர். இதன் மூலம் பார்லி கூட்டுக்குழுவுக்கு 5 கோடி கருத்துகள் வந்திருக்கலாம்.
அரசு கேட்டு கொண்டுள்ளதால், பதில்கள் வந்துள்ளன. இவ்வளவு பேர் பதிலளித்ததில் என்ன பிரச்னை இருக்க முடியும். வெளிநாட்டினரின் பங்கு என்பது கற்பனையானது. பொது சிவில் சட்டம் குறித்து 4.85 கோடி பேர் கருத்து அனுப்பி இருந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
கண்டனம்
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சக்திசின் கோஹில் கூறியதாவது: இந்தியா போன்ற பெரிய நாட்டில், 1.5 கோடி மக்கள் தங்களது கருத்தை பதிவு செய்துள்ளதற்கு பா.ஜ.,வுக்கு வேதனை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் ஜனநாயகத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை காட்டுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.