திருப்பரங்குன்றத்தில் 2 மணி நேரம் மட்டும் தீபம் ஏற்றினால் யாருக்கு என்ன பிரச்னை? உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் வாதம்
திருப்பரங்குன்றத்தில் 2 மணி நேரம் மட்டும் தீபம் ஏற்றினால் யாருக்கு என்ன பிரச்னை? உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் வாதம்
ADDED : நவ 19, 2026 10:55 PM

- சிறப்பு நிருபர் -
'திருப்பரங்குன்றம் தீபத் தூணில், ஆண்டுக்கு ஒரு நாள் இரண்டு மணி நேரம் மட்டும் தீபம் ஏற்றுவதால் யாருக்கு என்ன பிரச்னை' என உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கியிருந்தார். இதை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்திருந்தது. இதற்கு எதிராக, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இது தொடர்பான அனைத்து வழக்குகளும், நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம்.பஞ்சோலி அமர்வு முன் கடந்த மூன்று நாட்களாக
விசாரிக்கப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் மலை கல் துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என ஹிந்து தமிழர் கட்சியை சேர்ந்த மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பில் அவரது வழக்கறிஞர் முன்வைத்த வாதம்: மலை உச்சியில் உள்ள கல்தூணில் நெய் ஊற்றி திரி வைத்து விளக்கேற்றும் வகையில் குழிவான அமைப்பு உள்ளது-. அதில், லிட்டர் கணக்கில் நெய்யை ஊற்றி திரியை வைத்து தீபம் ஏற்றலாம். இரண்டு மணி நேரம் வரை தீபம் அணையாமல் எரிய வாய்ப்புள்ளது. ஆண்டுக்கு ஒரு நாள், 2 மணி நேரம் மட்டும் இந்த குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்றுவதால் யாருக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டு விடப்போகிறது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதையடுத்து, விசாரணை இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தீபத் திருவிழா வரும் 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளதால், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உடனடியாக இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு கோரியுள்ள நிலையில், இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை முக்கிய உத்தரவு பிறப்பிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
