மும்பை தாக்குதலுக்கு உதவியது யார்?: ராணா வாக்குமூலத்தில் புதிய தகவல்
மும்பை தாக்குதலுக்கு உதவியது யார்?: ராணா வாக்குமூலத்தில் புதிய தகவல்
ADDED : ஏப் 14, 2025 05:55 AM

புதுடில்லி : மும்பை பயங்கரவாத தாக்குதலை அரங்கேற்ற, டேவிட் ஹெட்லிக்கு உதவிய நபர் குறித்து புதிய தகவல் வெளியானதை அடுத்து, அவரை வைத்து தஹாவூர் ராணாவிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கடந்த 2008 நவ., 26ல், மஹாராஷ்டிராவின் மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் உயிரிழந்தனர்.
சட்ட போராட்டம்
இந்த நாச வேலைக்கு மூளையாக செயல்பட்டவரும், வட அமெரிக்க நாடான கனடா குடியுரிமை பெற்று அமெரிக்காவில் வசித்து வந்த பாகிஸ்தானை சேர்ந்தவருமான தஹாவூர் ராணா, அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். நீண்ட சட்டப்போராட்டத்துக்கு பின் கடந்த 9ம் தேதி, நம் நாட்டின் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளிடம் ராணா ஒப்படைக்கப்பட்டார். அவரை, 18 நாட்கள் காவலில் எடுத்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் கிலானி என்று அழைக்கப்படும் டேவிட் கோல்மன் ஹெட்லியின் நம்பிக்கைக்கு உரியவராக ராணா திகழ்ந்ததும், இருவரும், பாகிஸ்தானின் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகளுடன் இணைந்து மும்பை தாக்குதலை அரங்கேற்றியதும் தெரியவந்தது. இது தொடர்பாக, துபாயில் வசிக்கும் முக்கிய புள்ளியை சந்தித்து ராணா பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், டேவிட் ஹெட்லிக்கு உதவ, தன் ஊழியர் ஒருவரை ராணா நியமித்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 'பணியாளர் பி' என அழைக்கப்படும் அவர், ராணாவின் அறிவுறுத்தலின்படி ஹெட்லியை அழைத்துச் செல்வது, பயணத்தை ஏற்பாடு செய்வது, தங்குவது மற்றும் வேலை செய்ய இடம் வழங்குவது போன்ற விஷயங்களை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணை
கடந்த 2006ல் மும்பை வந்த ஹெட்லியை வரவேற்றதுடன், அவரது உளவுப் பணிக்கு தேவையான தளவாடங்களை அந்த பணியாளர் ஏற்பாடு செய்ததும் ராணாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, அந்த பணியாளரை அடையாளம் கண்டுள்ள அதிகாரிகள், அவரை அழைத்து வந்து ராணாவிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
பலத்த பாதுகாப்புக்கு நடுவே ராணாவிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில், கிடைக்கப் பெற்ற தகவல்களை வைத்து மும்பை தாக்குதல் வழக்கை என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.