கர்நாடக மாநில செயலர் பதவி யாருக்கு ? கனவில் மிதக்கும் அ.தி.மு.க., நிர்வாகிகள்
கர்நாடக மாநில செயலர் பதவி யாருக்கு ? கனவில் மிதக்கும் அ.தி.மு.க., நிர்வாகிகள்
ADDED : அக் 31, 2024 07:37 AM

பெங்களூரு,; அ.தி.மு.க., மாநிலச் செயலர் பதவிக்கு நான்கைந்து பேர் போட்டியில் உள்ளனர். இதற்காக இப்பவே 'துண்டு' போட்டுள்ளனர். யாருக்கு அந்த நாற்காலி கிடைக்கப் போகுதோ? எப்போது அறிவிப்பு வருமோ என, காத்திருக்கும் நிர்வாகிகள், கனவில் மிதக்கின்றனர்.
கர்நாடக மாநில அ.தி.மு.க.,வில் மாலுமி இல்லாத கப்பலாக, தலைமை இல்லாமல் முடங்கிய நிலையில் இருப்பதாக அதன் தொண்டர்கள் உற்சாகமற்று உள்ளனர்.
அடையாளம்
மாநிலத்தில் சக்தி வாய்ந்த இயக்கமாக இருந்ததால் தான், சட்டசபையிலும், மாநகராட்சி, நகராட்சி, டவுன் சபைகளில், அ.தி.மு.க., தனது அடையாளத்தை காட்டியது.
கடந்த பத்து ஆண்டுகளில் தேசிய கட்சிகளின் இறுக்கத்தில் தமிழக மாநில கட்சிகள் கரை சேர முடியாமல் போயின. இருப்பினும், அ.தி.மு.க.,வில் 40 வயதை கடந்தவர்களில் பலர், இன்னமும் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படத்தை தன் வீட்டின் பூஜை அறையில் வைத்து பூஜிக்கின்றனர்.
மாநில செயலராக இருந்த எஸ்.டி.குமார், தன் பதவியை ராஜினாமா செய்த பிறகு, இதுவரை அந்த செயலர் பதவிக்கு யாரையும் நியமிக்கப்படவில்லை. கட்சியை வழிநடத்தும் மாலுமி இல்லை. இதனால், அக்கட்சித் தொண்டர்கள் தொய்வில் உள்ளனர். இப்பதவிக்கு பலர் முயற்சித்து வருகின்றனர். இன்னும் தலைமையிடம் இருந்து பதிலை காணோம்.
ஒரிஜினல்
இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., சசிகலா-, தினகரன் என பிரித்த போதிலும், இ.பி.எஸ்., தலைமையிலான அணியினர் தான், கர்நாடகாவிலும் 'ஒரிஜினல்' என்ற நடமாட்டம் உள்ளது. இதனால் ஒத்துப் போகாமல் ஒதுங்கிப் போனவர்கள் மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைந்து செயலாற்ற ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த லிஸ்ட்டில், அ.தி.மு.க.,வின் வளர்ச்சியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட முன்னாள் மாநில செயலர் யுவராஜ், நேற்று முன்தினம் மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
அவர் நமது நிருபரிடம் கூறியதாவது:
தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ கட்சியில் இருந்து விலகி ஒதுங்கி இருந்தேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை மனதில் தெய்வமாக ஏற்றுக் கொண்ட பல லட்சம் பேரில் நானும் ஒருவன்.
இந்த இருவரின் செயல்பாடுகளை ஒருங்கே பெற்று கம்பீரமாக உள்ளவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. எனவே, எனது தவறை உணர்ந்து, மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைய மன்னிப்பு கோரினேன். மறுபடியும் அ.தி.மு.க.,வில் இணைத்துக்கொள்ள கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதியுடன், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச் செயலர் முனிசாமி முன்னிலையில் கட்சியில் இணைந்தேன்.
புத்துயிர்
தொய்வில் உள்ள கர்நாடக மாநில அ.தி.மு.க., மீண்டும் புத்துயிர் பெறவேண்டும். அதற்காக கட்சி தொண்டர்களுடன் இணைந்து தலைமையின் ஆணைப்படி பணியாற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடக மாநில அண்ணா தொழிற்சங்கப்பேரவை செயலர் மு.அன்பு கூறியதாவது:
மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., நிறுவி, ஜெயலலிதா வளர்த்து விழுதுகள் நிறைந்த அ.தி.மு.க.,வுக்கு அழிவென்பது கிடையாது.
கர்நாடக அ.தி.மு.க., தலைமைக்கு தலைநகர் பெங்களூரை சேர்ந்தவர் இருந்தால் தான் கட்சிப் பணியை இயக்க முடியும். நான் தங்கவயலைச் சேர்ந்தவராக இருப்பதால் மாநில தலைமை பொறுப்புக்கு விருப்பப்படவில்லை.
அனைவரையும் ஒருங்கிணைத்து மூத்தோர் அறிவுரையுடன் நிர்வாகத்தை வழிநடத்த வேண்டும். முன்னாள் செயலர் யுவராஜ் மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைந்ததை வரவேற்கிறேன். மாநில அ.தி.மு.க.,வுக்கு வசந்த காலம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தலைமை முடிவு எதுவாக இருந்தாலும் 'ஓகே' தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
கனவு
அ.தி.மு.க., மாநில செயலர் பதவிக்கு நான்கைந்து பேர் போட்டியில் உள்ளனர். இதற்காக இப்பவே துண்டுப் போட்டுள்ளனர். யாருக்கு அந்த நாற்காலி கிடைக்க போகுதோ? இதற்கான அறிவிப்பு எப்போது வருமோ என, காத்திருக்கும் நிர்வாகிகள் கனவில் மிதக்கின்றனர்.

