மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தியது யார்? முதல்வர் சித்தராமையா விளக்கம்
மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தியது யார்? முதல்வர் சித்தராமையா விளக்கம்
ADDED : பிப் 12, 2025 07:04 AM

பெங்களூரு : ''மெட்ரோ ரயில் கட்டணத்தை நாங்கள் உயர்த்தவில்லை,'' என, முதல்வர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட ஊடக அறிக்கை:
பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு தன்னிச்சையான அமைப்பு. அந்த நிர்வாகம் மீது எங்கள் அரசுக்கு முழு கட்டுப்பாடு இல்லை. கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம், எங்களுக்கு இருந்தால், மத்திய அரசுக்கு, மெட்ரோ ரயில் நிர்வாகம் கடிதம் எழுதியது ஏன்? மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாட்டில் மெட்ரோ நிர்வாகம் வருகிறது.
மெட்ரோ ரயில் கட்டணம் 2017ம் ஆண்டு முதல் உயர்த்தப்படவில்லை. மெட்ரோ நிர்வாகம் எழுதிய கடிதத்திற்கு பதில் அளிக்கும் வகையில், ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தரணி தலைமையில் மத்திய அரசு ஒரு குழு அமைத்தது.
இந்த குழுவின் உறுப்பினர்கள், மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகளாக இருந்தனர். இந்த குழு சென்னை, டில்லி சென்று அங்கு உள்ள மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகளுடன் கட்டண உயர்வு குறித்து விவாதித்து அறிக்கை தாக்கல் செய்தது.
தற்போது மெட்ரோ ரயில் கட்டணம் குறைந்தபட்சம் 10 ரூபாயாகவும், அதிகபட்சம் 60 ரூபாயாகவும் உள்ளது. மும்பையில் அதிகபட்ச கட்டணம் 80 ரூபாய். டில்லியை தவிர மற்ற மாநிலங்களில் மெட்ரோ ரயில் கட்டணங்கள், நிர்வாகத்தால் முதலில் நிர்ணயம் செய்யப்பட்டது.
தற்போது மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழுவால் நிர்ணயிக்கப்படுகிறது. கட்டணத்தை நாங்கள் உயர்த்தவில்லை. ஆனால் காங்கிரஸ் அரசு கட்டணத்தை உயர்த்தியதாக பா.ஜ., தலைவர்கள் பொய்யான தகவலை பரப்புகின்றனர். இதன்மூலம் பொதுமக்களை போராட துாண்டுவது மன்னிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.