ADDED : செப் 25, 2024 07:22 AM
கடந்த காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி ஆட்சியின்போது, சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர்களாக எஸ்.டி.சோமசேகர், பைரதி பசவராஜ், முனிரத்னா ஆகியோர் இருந்தனர்.
ஆப்பரேஷன் தாமரையால், காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தனர். காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.
இதில், ஆச்சர்யம் என்னவென்றால், அப்போது சித்தராமையாவின் ஆதரவாளர்களாக இருந்த மூவரும், பா.ஜ.,வில் இணைந்தது கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்தனர். காங்கிரசில், இவர்களை 'எஸ்.பி.எம்., நண்பர்கள்' என்று அழைப்பர்.
கூட்டணி ஆட்சியை கவிழ்க்க காரணமாக இருந்தவர்கள், இதற்கான பலனை அனுபவிப்பர் என காங்கிரஸ் தலைவர்கள் கூறியிருந்தனர்.
ரிட்டயர்டு ஹர்டு
தற்போது கர்நாடகாவில் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்துள்ள காங்கிரஸ், தனது 'ஆட்டத்தை' துவக்கி உள்ளது. ஆட்சியில் காங்கிரஸ் அமர்ந்தவுடன், பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர், காங்கிரசுக்கு ஆதரவாக பேசி வந்தார். இதனால், அவர்களுக்கும், பா.ஜ.,வினருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.
தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு வரும் முதல்வர், துணை முதல்வர்களின் கூட்டங்களில் பங்கேற்றார். இருவர் பற்றியும் புகழ்ந்து பேசி வருகிறார். அவ்வப்போது முதல்வர், துணை முதல்வரை சந்தித்துப் பேசி, பா.ஜ.,வினருக்கு எரிச்சலை ஊட்டி வருகிறார்.
இவர்களுடன் நெருக்கமாக இருந்த முனிரத்னாவை காங்கிரசார் குறிவைத்து இருந்தனர். இதற்கு ஏதுவாக, ஒரு ஒப்பந்ததாரரின் சமுதாயத்தை குறிப்பிட்டு திட்டியதாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மூன்று நாட்களில் ஜாமினில் வெளியே வந்தார்.
ஆனால், சிறையில் இருந்து வெளியே வந்தவுடன், கோழியை அமுக்குவது போல் போலீசார் அமுக்கி, பலாத்காரப் புகாரில் கைது செய்தனர். 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அவருக்கு எதிராக, காங்கிரசார் நடத்திய போராட்டத்தில், பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர் பங்கேற்று, குழப்பத்தை ஏற்படுத்தினார்.
''முனிரத்னா பெண்கள் குறித்து பேசியதால், எனது தொகுதி பெண்கள் மன வேதனை அடைந்து உள்ளனர்,'' என்று சமாளித்தார்.
அடுத்த இலக்குகள்
அடுத்ததாக முன்னாள் அமைச்சரும், பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுமான பைரதி பசவராஜ் மீது காங்கிரசார் குறிவைத்துள்ளனர். அதற்குள் சித்தராமையா விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ளது.
இதனால், காங்கிரசார் சற்று அமைதியாக இருக்கலாம். இதேவேளையில், இவரின் சகோதரர் பைரதி சுரேஷ், காங்கிரஸ் அரசின் அமைச்சராக உள்ளார். அவரை மீறி, தனது சகோதரர் மீது நடவடிக்கை எடுக்க, அவர் ஆதரிப்பாரா என்பது சந்தேகம் தான்.
சிக்கபல்லாபூர் பா.ஜ., - எம்.பி., சுதாகர் மீதும் தனது பார்வையை காங்கிரஸ் திருப்பி உள்ளது. பா.ஜ., ஆட்சியில் சுகாதார துறை அமைச்சராக இருந்த அவர், கொரோனா காலகட்டத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு செய்துள்ளதாக அப்போதே, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சித்தராமையா குற்றஞ்சாட்டி இருந்தார்.
இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஜான் டி குன்ஹா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டிருந்தது.
இந்த கமிட்டி அளித்த முதல்கட்ட அறிக்கையில், முறைகேடு நடந்தள்ளதாக குறிப்பிட்டிருந்தது.
காங்கிரசின் இந்த செயலுக்கு, அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என திகிலுடன் உள்ளனர்.
- நமது நிருபர் -