ஐ.டி., வலையில் சிக்குவது யார் யார்? அதிர்ச்சியில் உறைந்துள்ள முக்கிய புள்ளிகள்
ஐ.டி., வலையில் சிக்குவது யார் யார்? அதிர்ச்சியில் உறைந்துள்ள முக்கிய புள்ளிகள்
ADDED : மார் 08, 2024 11:07 PM
பெங்களூரு: லோக்சபா தேர்தல் நெருங்குவதால், முறைகேடாக பணம் பதுக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை, கர்நாடக மற்றும் கோவா வருமான வரித்துறை அதிகாரிகள் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் முக்கிய புள்ளிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஒவ்வொரு தேர்தலுக்கும், வேட்பாளர்கள் அதிகபட்சமாக எவ்வளவு பணம் செலவு செய்யலாம் என்பதை தேர்தல் ஆணையம் தெரிவிக்கும்.
உள்ளாட்சி தேர்தல், சட்டசபை, லோக்சபா என, தேர்தலுக்கு தேர்தல் அதன் தொகை மாறுபடும். தேர்தல் செலவினங்கள் குறித்து வேட்பாளர் செலவின தேர்தல் அதிகாரிக்கு கணக்குகளை பில்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
சமர்ப்பணம்
வேட்பாளரோ அல்லது அவரால் நியமிக்கப்பட்டுள்ள ஏஜென்டோ மட்டுமே கையொப்பம் இட்டு சமர்ப்பணம் செய்யலாம். பிரசாரத்துக்குச் செல்லும்போது, வேட்பாளர் செல்லும் இடமெல்லாம், தேர்தல் அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டே இருப்பர்.
இதற்கிடையில், தேர்தல் அதிகாரிகளின் கண்களில் மண்ணை துாவி, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது, கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்களுக்கு பணத்தை வாரி வாரி வழங்குவது பல ஆண்டுகளாக நடக்கிறது.
இது தேர்தல் விதிமுறைப்படி குற்றமாகும். இதை தடுப்பதற்காக அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுவர். ஆனாலும், அவர்களுக்கு தெரியாமல் நடப்பது நடந்து கொண்டே தான் இருக்கும்.
இதற்கான பணத்தை, பெரும்பாலான வேட்பாளர்கள் தங்கள் வீட்டில் மட்டுமின்றி, நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்ததை கடந்த காலங்களில் பார்த்துள்ளோம்.
அதிகாரிகள் சோதனை
இந்த பணம் முறைகேடாக சம்பாதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே தேர்தல் முறைகேடுக்காக பதுக்கி வைத்திருக்கும் பணத்தை பறிமுதல் செய்வதை, ஒவ்வொரு தேர்தலின் போதும், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவர்.
இந்த வகையில், லோக்சபா தேர்தல் நெருங்குவதால், முறைகேடு பணம் பதுக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை, கர்நாடக மற்றும் கோவா வருமான வரித்துறை அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல், தங்கள் வேட்டையை ஆரம்பித்து விடுவர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக, ஒரு வருமான வரித்துறை அதிகாரி தெரிவித்தார்.
இதனால், பணத்தை பதுக்கி வைத்துள்ள முக்கிய புள்ளிகள், சோதனை பட்டியலில் தங்கள் பெயர் இருக்குமோ என்று, அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

