sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆட்சியை பிடிக்கப் போவது யாரு... ஓட்டு எண்ணிக்கை 8 மணிக்கு துவக்கம் உடனுக்குடன் முடிவுகள் அறிவிப்பு

/

ஆட்சியை பிடிக்கப் போவது யாரு... ஓட்டு எண்ணிக்கை 8 மணிக்கு துவக்கம் உடனுக்குடன் முடிவுகள் அறிவிப்பு

ஆட்சியை பிடிக்கப் போவது யாரு... ஓட்டு எண்ணிக்கை 8 மணிக்கு துவக்கம் உடனுக்குடன் முடிவுகள் அறிவிப்பு

ஆட்சியை பிடிக்கப் போவது யாரு... ஓட்டு எண்ணிக்கை 8 மணிக்கு துவக்கம் உடனுக்குடன் முடிவுகள் அறிவிப்பு


ADDED : பிப் 07, 2025 10:05 PM

Google News

ADDED : பிப் 07, 2025 10:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நாடே எதிர்பார்க்கும் டில்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. கடந்த 5ம் தேதி ஓட்டுப் பதிவு முடிந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.ஒவ்வொரு சுற்று முடிவிலும் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

தலைநகர் டில்லியில் 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த 2021 - 2022ம் ஆண்டு டில்லி அரசின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, துணைநிலை கவர்னர் சக்சேனா உத்தரவுப்படி வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை முதல்வராக இருந்த கெஜ்ரிவால், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் தற்போது ஜாமினில் உள்ளனர். உச்ச நீதிமன்ற ஜாமினில் வந்த அரவிந்த் கெஜ்ரிவால் தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஆதிஷி சிங் தேர்வு செய்யப்பட்டு முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

இந்தச் சூழ்நிலையில், டில்லி சட்டசபைக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி, 27 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் பா.ஜ., ஆகிய கட்சிகளிடையே கடும் நிலவுவியது. இருகட்சிகளையும் எதிர்த்து காங்கிரஸ் கட்சியும் 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கியது.

699 பேர்


இதனால், தலைநகர் டில்லியின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற மும்முனை போட்டி நிலவியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் 699 வேட்பாளர்கள் களம் இறங்கினர்.

ஆனால், இம்முறை மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி தலைவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது அக்கட்சிக்கும் சற்று பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

மூன்றாவது முறையாகவும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள திட்டமிட்ட ஆம் ஆத்மி, பெண்களுக்கு மாதந்தோறும் 2,100 ரூபாய் நிதியுதவி, ஹிந்து கோவில் பூஜாரிகள் மற்றும் சீக்கிய குருத்வாரா கிரந்திகள் ஆகியோருக்கு மாதந்தோறும் 18,000 ரூபாய் நிதியுதவி, மூத்த குடிமக்களுக்கு தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை என வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறது.

ரூ.500க்கு சிலிண்டர்


அதேநேரத்தில், இலவசம் வழங்கும் திட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த பா.ஜ.,வும் டில்லி தேர்தலில் தன் நிலையை மாற்றிக் கொண்டது. ஆம் ஆத்மியைப் போலவே ப.ஜ.,வும் பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் நிதியுதவி, 500 ரூபாய்க்கு காஸ் சிலிண்டர், ஹோலி மற்றும் தீபாவளிப் பண்டிகைக்கு இலவச காஸ் சிலிண்டர் என வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளது.

இருகட்சிகளுக்கும் கொஞ்சமும் சளைக்காமல் காங்கிரஸ் கட்சியும் பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் நிதியுதவி, மூத்த குடிமக்களுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு, புத்த மத தலங்களுக்கு இலவச புனித யாத்திரை என்பது உள்ளிட்ட திட்டங்களை அறிவித்து, டில்லியில் மீண்டும் ஷீலா தீட்சித் மாடல் ஆட்சியை அமைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது.

ஆளும் கட்சியான ஆம் ஆத்மி தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே, 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தை துவக்கியது.

அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, ஆதிஷி சிங், சஞ்சய் சிங், கோபால் ராய் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அனைத்து தொகுதிகளிலும் பம்பரம் போல சுழன்று தீவிர பிரசாரம் செய்தனர். சமூக வலைதளங்களிலும் தினமும் வீடியோக்களை வெளியிட்டு பிரசாரம் செய்தனர்.

கூட்டணிக்கு இரண்டு


தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ., 68 இடங்களில் வேட்பாளர்களை களம் இறக்கியுள்லது. மீதி 2 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ் பாஸ்வான்) ஆகிய கட்சிகளுக்கு தலா ஒன்று என ஒதுக்கியது.

பா.ஜ.,வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பியுஷ் கோயல், நிர்மலா சீதாராமன் உட்பட மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள், யோகி ஆதித்யநாத், நயாப் சிங் சைனி, ஹிமந்த பிஸ்வா சர்மா உட்பட பா.ஜ., ஆளும் மாநிலம் முதல்வர்கள், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் டில்லியில் தீவிர பிரசாரம் செய்தனர்.

காங்கிரசிலும் ராகுல், பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் அனைத்து தொகுதிகளிலும் சுழன்று சுழன்று பிரசாரம் செய்தனர்.

இதற்கிடையில், பகுஜன் சமாஜ் கட்சியும் வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளதால், இது ஆம் ஆத்மிக்கு சற்று பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸிடம் இருந்து புதுடில்லி தொகுதியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. 2013, 2015 மற்றும் 2020 தேர்தல்களிலுமே இந்த தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று ஹாட்ரிக் அடித்த அரவிந்த் கெஜ்ரிவால், இந்த முறை வெற்றியை தக்கவைப்பாரா என்ற கேள்வி மக்கள் மத்தியிலேயே எழுந்துள்ளது.

ஷீலா தோல்வி


டில்லியில் 15 ஆண்டுகள் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் 2013-ம் ஆண்டு தேர்தலில் 25,864 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தோல்வியைத் தழுவினார். தற்போது இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஷீலா தீட்சித் மகன் சந்தீப் தீட்சித் களம் இறங்கியுள்ளார். தன் தாயிடம் இருந்து தொகுதியைப் பறித்த கெஜ்ரிவாலிடம் இருந்து புதுடில்லி தொகுதியை சந்தீப் மீட்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

டில்லி முதல்வர் ஆதிஷி சிங் போட்டியிடும் கல்காஜி தொகுதியில், பா.ஜ., மூத்த தலைவர் ரமேஷ் சிங் பிதுரி, காங்கிரசில் காங்கிரஸ் மகளிர் அணி தலைவி அல்கா லம்பா களம் இறங்கியுள்ளனர்.

கடந்த 2015 மற்றும் 2020 ஆண்டு நடந்த தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்ற ஆதிஷி சிங், ஹாட்ரிக் அடிப்பார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறது ஆம் ஆத்மி.

சிறைவாசம்


அதேபோல, ஜங்புரா தொகுதியில் போட்டியிடும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டதால், தன் பதவியை ராஜினாமா செய்தார்.

ஓராண்டுக்கும் மேல் திஹார் சிறையில் இருந்து, உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றார். சிசோடியாவை எதிர்த்து பா.ஜ.,வில் தர்விந்தர் சிங் வர்மா, காங்கிரசில் பர்ஹாத் சூரி போட்டியிடுகின்றனர்.

மேலும், ஆம் ஆத்மி ஆட்சியில் அமைச்சராக இருந்து பா.ஜ.,வுக்கு தாவிய கைலாஷ் கெலாட் போட்டியிடும் பிஜ்வாசன் மற்றும் மணீஷ் சிசோடியா கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற பட்பர்கஞ்ச் ஆகிய தொகுதிகளும் டில்லி தேர்தல் களத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன.

கடந்த 5ம் தேதி ஓட்டுப் பதிவு முடிந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஓட்டு இயந்திரங்களில் பதிவாகியுள்ள ஓட்டுக்கள் எண்ணப்பட்டு ஒவ்வொரு சுற்று முடிந்தவுடன் உடனே முடிவு அறிவிக்கப்பட்டுகிறது.

ஆட்டம் அடங்கி விடும்!


ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்துக்குப் பின், அக்கட்சியின் மூத்த தலைவரும் சுற்றுச் சூழல் துறை அமைச்சருமான கோபால் ராய் கூறியதாவது:

கெஜ்ரிவால் வழிகாட்டுதல்படி 70 வேட்பாளர்களும் தொகுதி நிலவர அறிக்கையை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கைகள் விரிவாக ஆலோசிக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் 50 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று, ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும். ஓட்டுப் பதிவுக்கு பின் வெளியான கருத்துக் கணிப்புகள் வாயிலாக பா.ஜ., தன் விரக்தியை வெளிப்படுத்துகிறது.

மேலும், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களுக்கு பணம் மற்றும் அமைச்சர் பதவி தருவதாக பேரம் பேசும் வேலையை பா.ஜ., துவக்கி விட்டது. பா.ஜ.,வின் 'ஆபரேஷன் தாமரை' டில்லியில் எடுபடாது. சுதந்திரமான மற்றும் நியாயமான ஓட்டு எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, “பா.ஜ., எப்போதும் ஜனநாயகத்தை நம்புவதில்லை. பணம் மற்றும் மிரட்டலை மட்டுமே பா.ஜ., தலைவர்கள் நம்புகின்றனர். குறுக்குவழிகளில்தான் தேர்தலில் வெற்றி பெற்று வருகிறது. இன்று தேர்தல் முடிவுக்குப் பின், பா.ஜ., ஆட்டம் அடங்கி விடும்,”என்றார்.

பலத்த பாதுகாப்பு

டில்லியில் ஒரு கோடியே 55 லட்சத்து 24,858 வாக்காளர்கள் உள்ளனர். அதில், 60.42 சதவீத வாக்காளர்கள் மட்டுமெ தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக வடகிழக்கு மாவட்டத்தில் 66.25 சதவீதம், குறைந்த பட்சமாக தென்கிழக்கு மாவட்டத்தில் 56.16 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன.

தேர்தலில் 21,584 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 20,692 கட்டுப்பாட்டு அலகுகள், 18,943 வி.வி., பேட்கள் பயன்படுத்தப்பட்டன.
டில்லியின் 11 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 19 ஓட்டு எண்ணும் மையங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பாதுகாப்பு அறைக்கும் துணை ராணுவப் படை, இரண்டு அடுக்குகளிலும், மூன்றாவது அடுக்கில் கூடுதல் துணை காவல் ஆணையர்தலைமையிலான போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தவிர 19 மையங்களிலும் 350க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.








      Dinamalar
      Follow us