கர்நாடகா யார் கோட்டை? வெற்றி குறித்து நடிகர் உறுதி
கர்நாடகா யார் கோட்டை? வெற்றி குறித்து நடிகர் உறுதி
ADDED : மார் 12, 2024 03:17 AM

தாவணகெரே: ''கர்நாடகா யாருடைய கோட்டையும் அல்ல. தேர்தல் களத்துக்கு வந்துள்ளோம்; வெற்றி பெறுவோம்,'' என, ஷிவமொகா காங்கிரஸ் வேட்பாளரான கீதாவின் கணவரும், நடிகருமான சிவராஜ்குமார் தெரிவித்தார்.
ஷிவமொகா லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகளும், நடிகர் சிவராஜ் குமார் மனைவியுமான கீதா போட்டியிடுகிறார்.
இதுகுறித்து தாவணகெரேயில், நேற்று சிவராஜ் குமார் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலுக்கான பணியை துவக்க வேண்டும். கீதா, ஷிவமொகாவில் பிறந்தவர்; அவருக்கு சொந்த வீடு உள்ளது. எப்போதும் அங்கேயே இருப்பார்.
தேர்தல் களம் மட்டுமல்ல, எந்த துறையாக இருந்தாலும் களத்துக்கு வந்தால், மன தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். கடந்த லோக்சபா தேர்தலில், கீதா தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து விவாதித்தோம். அவரது தந்தையும், தம்பியும் அரசியலில் இருப்பதால், ஷிவமொகாவின் பிரச்னைகள் பற்றி கீதாவுக்கும் தெரியும்.
ராஜ்குமார் குடும்பத்துக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் உள்ளது. அனைத்து கட்சி தலைவர்களும் எனது தந்தையை சந்தித்துள்ளனர்.
கர்நாடகா யாருடைய கோட்டையும் அல்ல. தேர்தல் களத்துக்கு வந்துள்ளோம்; வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

