சித்ரதுர்கா வேட்பாளர் யார்? பா.ஜ., - காங்., திணறல்!
சித்ரதுர்கா வேட்பாளர் யார்? பா.ஜ., - காங்., திணறல்!
ADDED : மார் 14, 2024 10:14 PM
- நமது நிருபர் -
லோக்சபா தேர்தலில், சித்ரதுர்கா தொகுதிக்கு வேட்பாளர் தேர்வு செய்ய முடியாமல், காங்கிரஸ், பா.ஜ., திண்டாடுகின்றன. தொண்டர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
சித்ரதுர்கா லோக்சபா தொகுதி, எஸ்.சி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது இந்த தொகுதி, பா.ஜ., வசம் உள்ளது. நாராயணசாமி எம்.பி.,யாக பதவி வகிக்கிறார்.
மத்திய அமைச்சராகவும் இருக்கிறார். இம்முறை தனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
துமகூரு மாவட்டத்தின் இரண்டு, சித்ரதுர்காவின் ஆறு சட்டசபை தொகுதிகள் அடங்கிய, சித்ரதுர்கா லோக்சபா தொகுதியில் போட்டியிட விரும்புவோர் எண்ணிக்கை, பா.ஜ., காங்கிரசில் மிக அதிகம்.
வெற்றி பெறும் திறன் கொண்ட வேட்பாளரை, இரண்டு கட்சிகளும் தேடுகின்றன. மார்ச் 8ல், ஏழு லோக்சபா தொகுதிகளுக்கு, வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது. இதில் சித்ரதுர்கா தொகுதி பெயர் இல்லை.
பா.ஜ., நேற்று முன்தினம், 20 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பெயரை அறிவித்தது. இதில் சித்ரதுர்கா வேட்பாளர் இல்லை. இந்த தொகுதிக்கு வேட்பாளரை தேர்வு செய்வதில் சிக்கல் உள்ளதா என்ற கேள்வி, தொண்டர்களை வாட்டி வதைக்கிறது.
இரண்டு கட்சிகளின் மாநில தலைமையும், சீட் எதிர்பார்ப்போரிடம் விண்ணப்பங்களை பெற்று, ஆய்வு செய்து மாநில, தேசிய தேர்தல் கமிட்டிக்கு அனுப்பியுள்ளது. வெற்றி பெறும் திறன், ஜாதி, பொருளாதார நிலை என, அனைத்து அம்சங்களையும் கவனித்து, வேட்பாளர் தேர்வு செய்யப்படுவர்.
சீட் எதிர்பார்க்கும் தலைவர்கள், பெங்களூருக்கும், டில்லிக்கும் பறந்து மேலிடத்தின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கின்றனர்.
தொடர்ந்து இரண்டு முறை, சித்ரதுர்கா தொகுதியில் வெற்றி மாலை சூடிய பா.ஜ., இம்முறையும், வெற்றி மாலை தனக்கே கிடைக்க வேண்டும் என, விரும்புகிறது. இன்னாள் எம்.பி., உட்பட எட்டு பேர் சீட் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
நாராயணாசாமிக்கு சீட் கிடைக்குமா அல்லது, புது முகம் களமிறக்கப்படுவாரா என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது. முன்னாள் எம்.பி., ஜனார்த்தன சாமியும் போட்டியிட ஆர்வம் காண்பிக்கிறார்.
காங்கிரசிலும் சீட்டுக்கு பலரும் வரிசையில் நின்றுள்ளனர். கட்சியின் ஆய்வறிக்கை அடிப்படையில், முன்னாள் எம்.பி., சந்திரப்பா, மாநில காங்., முதன்மை செயலர் நேர்லகுன்டே ராமப்பா, ஹட்டி திப்பேசாமி ஆகியோரின் பெயர்கள், சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் திம்மாபுராவின் மகன் வினயும், சீட் கேட்கிறார்.
பா.ஜ., காங்கிரசில் சீட்டுக்கு பலரும் முட்டி மோதுவதால், சித்ரதுர்கா தொகுதிக்கு வேட்பாளரை தேர்வு செய்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

