ADDED : பிப் 18, 2024 08:10 PM

புதுடில்லி:நாட்டில் மிகவும் பிரபலமான முதல்வர் யார் என்று நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை முந்தினார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.
பிரபல ஆங்கில இதழ், மக்களின் நாடித்துடிப்பு என்ற பெயரில், அவ்வப்போது கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த இதழ் சமீபத்தில் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.இதில், பிஜு ஜனதா தள தலைவரும், ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக், 52.7 சதவீத மக்கள் ஆதரவுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அதற்கடுத்த, மற்ற நான்கு இடங்களையும், பா.ஜ.,வைச் சேர்ந்தவர்களே பிடித்துள்ளனர்.
நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்,
51.3 சதவீத மக்கள் ஆதரவுடன், இரண்டாவது இடத்தில் உள்ளார்.வடகிழக்கு மாநிலமான அசாமின் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, 48.6 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தையும், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், 42.6 சதவீத ஆதரவுடன் நான்காவது இடத்தையும் பிடித்தார்.
மற்றொரு வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் முதல்வர் மாணிக் சாகா, 41.4 சதவீத ஆதரவுடன், புகழ்பெற்ற முதல்வர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.