UPDATED : மே 27, 2024 11:59 PM
ADDED : மே 27, 2024 11:57 PM

தேர்தலில் வெற்றி பெற்றால், பிரதமர் யார் என்பதை முடிவு செய்ய, 'இண்டியா' கூட்டணி தலைவர்கள், ஜூன் 1ல் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர். அதற்காக டில்லி வருமாறு, 28 கட்சிகளின் தலைவர்களுக்கு, காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட லோக்சபா தேர்தலில், இதுவரை ஆறு கட்டம் முடிந்து விட்டது. வரும் 1ல் ஏழாவது கட்ட தேர்தலும், 4ல் ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது.
கட்டாயம்
எண்ணிக்கை துவங்கிய சில மணி நேரங்களில் நிலவரம் தெரிந்துவிடும் என்பதால், அதற்குள் பிரதமர் பதவி யாருக்கு என்பதை முடிவு செய்ய வேண்டிய கட்டாயம், இண்டியா கூட்டணிக்கு ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கூட்டணியை பொருத்தவரை இந்த கேள்விக்கே இடமில்லை என்பதால், அவர்கள் இதுகுறித்து அலட்டிக்கொள்ளவில்லை.முதல் கட்ட ஓட்டு பதிவு முடியும்வரை, தயக்கத்துடனே பிரசாரம் செய்த காங்கிரஸ், அதன் பின் உத்தியை மாற்றிக் கொண்டது.
ஒவ்வொரு கட்டம் முடியும்போதும் அதன் தொனி மாறியது.
இப்போது, ஆட்சியை பிடித்துவிடுவோம் என்று பேசும் அளவுக்கு நம்பிக்கையை வளர்த்துக் கொண்டுள்ளது. எனவே, பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் கட்டம் வந்துள்ளதாக அது கருதுகிறது.அது குறித்து விவாதிக்கவும், ஆட்சி அமைப்பது பற்றி ஆலோசிக்கவும், வரும் 1ம் தேதி டில்லியில் கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு, காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. அதில் பங்கேற்குமாறு தி.மு.க., உள்ளிட்ட 28 கட்சிகளின் தலைவர்களுக்கு, காங்கிரஸ் தலைவர் கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.
இறுதிக்கட்ட ஓட்டு பதிவு நடக்கும் அதே நாளில், கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடத்த என்ன அவசியம் என்று, இண்டியா கூட்டணி வட்டாரத்தில் விசாரித்தபோது, சீனியர் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:டில்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
பொய் வழக்கு
இந்திய அரசியலில் மிகவும் முக்கியமான தேர்தலில் பிரசாரம் செய்ய விடாமல் தடுப்பதற்காகத்தான் பொய் வழக்கு போட்டு, அவரை சிறையில் தள்ளியதாக நாங்கள் பிரசாரம் செய்தோம். மத்திய அரசின் கடும் எதிர்ப்பை மீறி, கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. அதையடுத்து, அவர் மீதும் இண்டியா கூட்டணி மீதும் பொதுமக்களின் நம்பிக்கை வெகுவாக அதிகரித்தது.
அவரது பிரசாரமும் பேட்டிகளும் மக்களிடம் பெரும் தாக்கத்தை உண்டாக்கி இருக்கின்றன. எனினும், 1ம் தேதி வரைதான் அவருக்கு இடைக்கால ஜாமின் கிடைத்துள்ளது. அடுத்த நாளே அவர், திஹார் சிறைக்கு திரும்ப வேண்டும். கெஜ்ரிவாலும் பங்கேற்க வசதியாக கூட்டணியின் ஆலோசனைக்கு தேதி குறித்தோம். இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால், யார் பிரதமராக பதவி ஏற்பது, கூட்டணி அமைச்சரவையை வழிநடத்திச் செல்வது யார், கூட்டணி ஆட்சியின் குறைந்தபட்ச செயல் திட்டம் என்ன? இது குறித்தெல்லாம் ஆலோசித்து முடிவெடுக்க விரும்புகிறோம். பிரதமர் பதவி மீது ஆசை இல்லை என, கெஜ்ரிவால் கூறி விட்டார். எனவே, தகுதியான தலைவர் ஒருவரை பிரதமர் பதவிக்கு தேர்வு செய்ய விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -