யார் உண்மையான தேசியவாத காங்கிரஸ்?: தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து சரத் பவார் மனு
யார் உண்மையான தேசியவாத காங்கிரஸ்?: தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து சரத் பவார் மனு
UPDATED : பிப் 13, 2024 03:17 PM
ADDED : பிப் 13, 2024 01:19 PM

புதுடில்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னம் மற்றும் பெயரை அஜித் பவார் தரப்பு பயன்படுத்த தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சரத்பவார் மனு தாக்கல் செய்துள்ளார்.
மஹாராஷ்டிராவில், முக்கிய கட்சியான சிவசேனா கட்சியில் திடீரென ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணி உருவானது. இந்த அணி பா.ஜ.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. இதையடுத்து உத்தவ் தலைமையிலான சிவசேனாவுக்கும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி என இரண்டாக உடைந்தது.
இது தொடர்பான வழக்கில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சியே உண்மையான சிவசேனா என அறிவித்தது. அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்., கட்சிக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
சரத் பவார் தரப்புக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அஜித் பவார் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 6ம் தேதி அங்கீகரித்தது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான 'கடிகாரம்' அஜித் பவார் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சரத் பவார் அணிக்கு 'தேசியவாத காங்கிரஸ் - சரத் சந்திர பவார்' என்றும் புதிய பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னம் மற்றும் பெயரை அஜித் பவார் தரப்பு பயன்படுத்த தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சரத்பவார் மனு தாக்கல் செய்துள்ளார்.
தங்களது தரப்பை கலந்தாலோசிக்காமல் எவ்வித உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்ககூடாது என உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே அஜித் பவார் தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.