அஜித் பவாருடன் விமான விபத்தில் உயிரிழந்த இரு விமானிகள்!
அஜித் பவாருடன் விமான விபத்தில் உயிரிழந்த இரு விமானிகள்!
UPDATED : ஜன 28, 2026 08:40 PM
ADDED : ஜன 28, 2026 02:07 PM

புனே: மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்த விமான விபத்தில், அந்த விமானத்தை இயக்கிய பைலட்டுகள் சுமீத் கபூர், ஷாம்பவி பதக் ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.
மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், இன்று காலை விமான விபத்தில் பலியானார். அவருடன் பயணித்த அனைவரும் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதறி உயிரிழந்துள்ளனர்.
இந்த சிறிய ரக விமானத்தை பைலட் சுமித் கபூர் மற்றும் 2ம் நிலை பைலட் ஷாம்பவி பதக் ஆகியோர் இயக்கியுள்ளனர். இவர்கள் இருவருமே அனுபவம் வாய்ந்த மற்றும் நன்கு பயிற்சி பெற்றவர்கள் பைலட்டுகள் என்பதை விஎஸ்ஆர் ஏவியேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெண் விமானியான கேப்டன் ஷாம்பவி பதக், ராணுவ அதிகாரி ஒருவரின் மகள். இந்த விமானத்தில் 2ம் நிலை பைலட்டாக இருந்தார். இவர் விமானப்படை பால் பாரதி பள்ளியில் பயின்றவர்.
மும்பை பல்கலையில் ஏவியேஷன் மற்றும் ஏரோஸ்பேஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். மேலும், நியூசிலாந்து சர்வதேச வணிக விமானிகள் அகாடமியில் பயிற்சி பெற்றவர்.
கேப்டன் சுமித் கபூர் தலைமை விமானியாகப் பணியாற்றி வந்தவர். விமானம் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நேரங்களில் விமானக் குழுவினரை வழிநடத்தும் பொறுப்பில் இவர் இருந்தார். இருவருமே டில்லியைச் சேர்ந்தவர்கள்.

