பீஹாரில் முதல்வர் பதவி யாருக்கு? கிளம்பியது எதிர்பார்ப்பு
பீஹாரில் முதல்வர் பதவி யாருக்கு? கிளம்பியது எதிர்பார்ப்பு
UPDATED : நவ 14, 2025 10:24 PM
ADDED : நவ 14, 2025 06:34 PM

நமது சிறப்பு நிருபர்
பீஹார் தேர்தல் முடிவில் நிதிஷ் கட்சியை விட பா.ஜ., அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வர் பதவியில் மாற்றம் வருமா என்று எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
பீஹார் தேர்தலில் பாஜ, நிதிஷ்குமார் தலைமையிலான தேஜ கூட்டணி, தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பில் கூறியதை விட, அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து உள்ளது. இந்த தேர்தல் முடிவை தான் இப்போது மொத்த நாடும் உற்று பார்த்துக்கொண்டு இருக்கிறது.
இந்த முறை பாஜ, ஜேடியு உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி, இமாலய வெற்றியை பெறுகிறது. மொத்த முள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களில் தேஜ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு பக்கம் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை ருசிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில், யார் அடுத்த முதல்வர் என்பது தான் அடுத்து முக்கியமான விஷயமாகும்.
நிதிஷ் குமார் கட்சியை விட பா.ஜ., அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உயர்ந்துள்ளது. இதனால் முதல்வர் பதவியில் மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர், 'நிதிஷ்குமார் தான் அடுத்த முதல்வர்' என அடித்துக்கூறி வருகின்றனர்.
மத்திய அரசுக்கு, நிதிஷ் குமார் கட்சி எம்.பி.,க்களின் ஆதரவு தேவை என்பதால், பீஹார் முதல்வர் பதவியில் மாற்றம் வர வாய்ப்பில்லை என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
எனவே, நிதிஷ் குமார் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பீஹார் அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

