மஹாராஷ்டிராவின் முதல்வர் யார்? கூட்டணியில் தொடரும் இழுபறி
மஹாராஷ்டிராவின் முதல்வர் யார்? கூட்டணியில் தொடரும் இழுபறி
ADDED : நவ 26, 2024 02:08 AM
புதுடில்லி: மஹாராஷ்டிரா தேர்தலில் மஹாயுதி கூட்டணி அபார வெற்றி பெற்ற நிலையில், முதல்வர் யார் என்பதை தீர்மானிப்பதில் கூட்டணி கட்சிகளிடையே இழுபறி நீடிக்கிறது.
மஹாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், ஆளும் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மஹாயுதி கூட்டணி, 233 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.
சிவசேனாவைச் சேர்ந்தவரும், முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சட்டசபை தேர்தலை மஹாயுதி கூட்டணி எதிர்கொண்டாலும், இந்த தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளதால் அக்கட்சியைச் சேர்ந்தவரே முதல்வராக நியமிக்கப்படுவார் என்ற பேச்சு எழுந்தது.
இதன்படி, துணை முதல்வராக இருந்த தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக தேர்ந்தெடுப்பதற்கான அறிகுறி பா.ஜ.,வில் தென்படுகிறது.
சிவசேனா கட்சி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், ஏற்கனவே முதல்வராக உள்ள ஏக்நாத் ஷிண்டேவையே மீண்டும் முதல்வராக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துஉள்ளனர்.
முதல்வர் பதவியை இழப்பது, அவரது அதிகாரத்தை குறைத்து மதிப்பிடுவதாக கருதப்படும் என்பது சிவசேனாவின் கருத்தாக உள்ளது.
கூட்டணியில் மூன்றாவதாக உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவார், இந்த பந்தயத்தில் இருந்து ஒதுங்கியதுடன், தேவேந்திர பட்னவிஸ் முதல்வராவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மூன்று கட்சிகளும் தனித்தனியாக கூட்டம் நடத்தினாலும் முதல்வரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடிக்கிறது.
மஹாராஷ்டிரா அரசின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைய உள்ளதால், புதிய முதல்வர் அறிவிக்கப்பட்டு ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் மஹாயுதி கூட்டணி உள்ளது. சட்டசபை காலம் முடிவடைந்த பின் ஆட்சி அமைப்பது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
முந்தைய அரசின் பதவிக்காலம் முடிவடைந்து, 11 நாட்களுக்கு பின் புதிய அரசு அமைந்தது. தற்போதும் அதே சூழல் நிலவுவதற்கான வாய்ப்பு உள்ளது.