தே.ஜ., கூட்டணியின் பீஹார் முதல்வர் வேட்பாளர் யார்? தேர்தலுக்கு பின் முடிவு செய்வோம் என்கிறார் அமித் ஷா
தே.ஜ., கூட்டணியின் பீஹார் முதல்வர் வேட்பாளர் யார்? தேர்தலுக்கு பின் முடிவு செய்வோம் என்கிறார் அமித் ஷா
ADDED : அக் 18, 2025 07:37 AM

பாட்னா: “பீஹார் சட்டசபை தேர்தலை முதல்வர் நிதிஷ் குமாரை முன்னிறுத்தியே சந்திக்கிறோம். தேர்தலில் வெற்றி பெற்றதும், முதல்வர் யார் என்பதை கூட்டணி கட்சியினர் கலந்து பேசி முடிவு செய்வர்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
நவ., 6ல், 121 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடக்கும் நிலையில், 11ல், 122 தொகுதிகளில் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது.
நவ., 14ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தேர்தலில் பா.ஜ., மற்றும் காங்., கூட்டணிகள் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
பிரசாரம்
பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு தேர்தல் பிரசாரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதன்படி, பா.ஜ., - நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலா, 101 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி, 29 தொகுதிகளில் களம் காண்கிறது.
முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்முடிந்த நிலையில், காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணியில் தொகுதி பங்கீடே இறுதியாகவில்லை. எனினும், அக்கட்சிகளின் நிர்வாகிகள் வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர்.
இந்நிலையில், ஆங்கில தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று அளித்த பேட்டி:
முதல்வராக நிதிஷ் குமார் இருப்பாரா, இல்லையா என்பது குறித்து, நான் முடிவெடுக்க முடியாது. பீஹார் சட்டசபை தேர்தலை, அவரை முன்னிறுத்தியே தே.ஜ., கூட்டணி எதிர்கொள்கிறது. தேர்தலில் வெற்றி பெற்றதும், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து கூடி பேசி முதல்வரை தேர்வு செய்வர்.
கடந்த சட்டசபை தேர்தல் வெற்றியை காட்டிலும், இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைக்கும். இதில் சந்தேகமே வேண்டாம்.
கடந்த, 2020 சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளத்தை விட பா.ஜ., அதிக தொகுதிகளை வென்றதால், அக்கட்சியைச் சேர்ந்தவரே பீஹார் முதல்வராக இருக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடியிடம் நிதிஷ் குமார் வலியுறுத்தினார்.
ஆனால், நாங்கள் கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்தோம். நிதிஷ் குமார் மீதுள் ள மரியாதை மற்றும் சீனியாரிட்டியை கருதி, அவரை முதல்வராக்கினோம்.
நிதிஷ் குமாரின் உடல்நிலை குறித்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அவதுாறு பரப்பி வருகின்றனர். அவருடன் தொலைபேசியிலும், நேரிலும் பேசியிருக்கிறேன்.
விருப்பம்
எந்தவொரு பிரச்னையையும் நான் பார்க்கவில்லை. வயது மூப்பு காரணமாக சில பிரச்னைகள் எழலாம். அது அனைவருக்கும் பொதுவானது. நிதிஷ் குமாருடன் சேர்ந்து, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் பீஹார் நிர்வாகத்தை கவனித்துக் கொள்கின்றனர்.
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் ஆட்சியை கண்ட பீஹார் மக்கள், அவர் மீண்டும் வெற்றி பெறக்கூடாது என விரும்புகின்றனர். சிறிய கூட்டணி கட்சிகளை காங்., எப்போதும் குறைத்தே மதிப்பிடுகிறது.
மற்றவர்களை இழிவுபடுத்தி சிறுமைப்படுத்த நினைப்பதால், காங்கிரசே சிறியதாகி விட்டது. இந்த ஆணவமே, பீஹார் முதல் மேற்கு வங்கம் வரை பல மாநிலங்களில் அக்கட்சியின் செல்வாக்கை இழக்க செய்தது. இவ்வாறு அவர் கூறினார்.