தே.ஜ., கூட்டணியின் துணை ஜனாதிபதி... வேட்பாளர் யார்? :இன்று முடிவு செய்கிறது பா.ஜ., மேலிடம்
தே.ஜ., கூட்டணியின் துணை ஜனாதிபதி... வேட்பாளர் யார்? :இன்று முடிவு செய்கிறது பா.ஜ., மேலிடம்
ADDED : ஆக 17, 2025 01:44 AM

டில்லியில் இன்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ., - பார்லி., குழுக் கூட்டம் நடக்கிறது. இதில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளரை இறுதி செய்வது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. தொடர்ந்து, நாளை மறுநாள் தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் கூட்டமும் நடக்கிறது. நாட்டின், 14வது துணை ஜனாதிபதியாக 2022 ஆகஸ்டில் பதவியேற்ற ஜக்தீப் தன்கர், 74, உடல்நிலையை காரணம் காட்டி, கடந்த மாதம் 21ல் ராஜினாமா செய்தார். பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே அவர் ராஜினாமா செய்தது, தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. மத்திய பா.ஜ., அரசுக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு நிலவியதால் பதவி விலகியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, 15வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க செப்., 9ல் தேர்தல் நடக்கும் என்றும், ஓட்டுப்பதிவு முடிந்ததும் அன்றைய தினம் மாலை 5:00 மணிக்கு பின், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7ம் தேதி துவங்கிய நிலையில், வரும் 21 வரை மனு தாக்கல் செய்யலாம்.
விறுவிறுப்பு இதனால், துணை ஜனாதிபதி தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. முதற்கட்ட ஆலோசனையை கூட எதிர்க்கட்சிகளின், 'இண்டி' கூட்டணி இன்னும் துவங்காத நிலையில், அடுத்தடுத்த சந்திப்பு, ஆலோசனை என பா.ஜ., தலைவர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
கடந்த இரு நாட்களாக பா.ஜ., தலைவர்கள் மாறி மாறி சந்திப்புகளை நடத்தினர். குறிப்பாக டில்லியில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ., தேசிய தலைவரும், சுகாதாரத் துறை அமைச்சருமான நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இடையே, அடுத்தடுத்த சந்திப்புகள் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தின.
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிய, இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், டில்லியில் இன்று, பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ., - பார்லி., குழுக் கூட்டம் நடக்கிறது. இதில், ஆளும் தே.ஜ., கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. கூட்டத்தில், வேட்பாளர் இறுதி செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
தேர்தல் விவகாரங்கள் எதுவாக இருந்தாலும், பா.ஜ., - பார்லி., குழு தான் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கும். அந்த வகையில் துணை ஜனாதிபதி வேட்பாளரை இறுதி செய்ய இந்தக் குழுவின் கூட்டம் இன்று நடக்கிறது.
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நட்டா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், தர்மேந்திர பிரதான், கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் இதில் பங்கேற்க உள்ளனர்.
எதிர்பார்ப்பு இதைத் தொடர்ந்து, டில்லியில் நாளை மறுநாள், பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் கூட்டம் நடக்கவுள்ளது. இதில் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில், துணை ஜனாதிபதி வேட்பாளர் பெயரை பிரதமர் மோடி அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, கடந்த 6ம் தேதி நடந்த தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் கூட்டத்தில், துணை ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்ய பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா ஆகியோருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
துணை ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை, ஆளும் தே.ஜ., கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதி. எனினும், அக்கூட்டணிக்கு நெருக்கடி கொடுப்பதற்கு வேட்பாளரை நிறுத்த, 'இண்டி' கூட்டணி முடிவு செய் துள்ளது.
- நமது டில்லி நிருபர் -