இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பாடம்; கேரளா அரசியலில் 'ஹாட் டாபிக்' இதுதான்!
இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பாடம்; கேரளா அரசியலில் 'ஹாட் டாபிக்' இதுதான்!
UPDATED : நவ 25, 2024 09:29 PM
ADDED : நவ 25, 2024 09:22 PM

கோவை: கேரளாவில் நடந்த பாலக்காடு, சேலக்கரை சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்கள், மாநிலத்தின் மூன்று பிரதான அரசியல் கூட்டணிகளுக்கும் பாடத்தை கற்பித்துள்ளன என்கின்றனர், அரசியல் விமர்சகர்கள்.
கேரள மாநிலம் பாலக்காடு, சேலக்கரை சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் முறையே காங்., மற்றும் மா.கம்யூ., வென்றுள்ளது. வயநாடு லோக்சபா இடைத்தேர்தலிலும் காங்., வென்றுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள், மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி, பா.ஜ., ஆகிய மூன்று தரப்பினருக்குமே ஒவ்வொரு வகையில் பாடமாக அமைந்துள்ளன என்பதே பலரது கருத்தாக உள்ளது.
மாநிலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது பாலக்காடு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல். காங், தரப்பில் ராகுல் மாங்கூட்டம், பா.ஜ.,வில் மாநில செயலாளர் கிருஷ்ணகுமார், மா.கம்யூ., ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளர் ஷரின் ஆகியோர் போட்டியிட்டனர்.
ஏற்கனவே காங்., வசம் இருந்த தொகுதிதான். ஆனால், பா.ஜ., வலுவாக இருந்தது. குறிப்பாக நகரப் பகுதியில். இதனால், பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என கணிக்கப்பட்டது.
கடந்த சட்டசபைத் தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் வெறும் 3,859 ஓட்டுகளில்தான் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டிருந்தார். ஆனால், இடைத்தேர்தலில், காங்கிரஸின் ராகுல் மாங்கூட்டம் 18, 840 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருப்பது பா.ஜ., வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
பாலக்காடு நகராட்சி பா.ஜ.,வின்வசம் உள்ளது. 2021 தேர்தலில், நகராட்சிக்குள் பா.ஜ., 34 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகளைப் பெற்றிருந்தது. தற்போது, அங்கு 7 ஆயிரம் ஓட்டுகள் குறைந்துள்ளன. காங்., கடந்த முறையை விட 4,590 ஓட்டுகள் அதிகம் பெற்றிருக்கிறது.
பாலக்காட்டை பா.ஜ., தனது முக்கியத் தொகுதியாகக் கருதி வந்தது. இங்கு பா.ஜ.,வின் படுதோல்வி, கட்சிக்குள் பெரும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, மாநில தலைவர் சுரேந்திரனுக்கு எதிராக கலகக்குரல்கள் வெடித்துள்ளன.
ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகள் கடும் உழைப்பைத் தந்திருந்தும் காங்., வென்றிருப்பது பா.ஜ., மேல்மட்டத்தின் தோல்வி என்றே, பா.ஜ.,வினர் குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடருமானால், உள்ளாட்சி நிர்வாகத்தையும் இழக்க நேரிடும் எனவும் எச்சரிக்கின்றனர். பாலக்காடு பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்டது கிருஷ்ணகுமார் என்றாலும், தோற்றது மாநிலத் தலைவர் சுரேந்திரன்தான் என்கின்றனர் கட்சியின் 2ம் கட்டத் தலைவர்கள்.
சுரேந்திரனின் தேர்தல் வரலாறு அப்படிப்பட்டது. 2009 முதல் கடந்த லோக்சபா தேர்தல் வரை 9 முறை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். அனைத்திலும் தோல்விதான்.
கடந்த 11 ஆண்டுகளாக மத்தியில் பா.ஜ., ஆட்சி இருந்தும், மாநிலத் தலைவர் ஒருவர், வெற்றி வாய்ப்புள்ள தொகுதியை கோட்டை விட்டிருப்பது கட்சிக்கு நல்லதல்ல என விமர்சனங்கள் எழுந்துள்ளன.பாலக்காடு வெற்றிக்காக சுரேந்திரன் செயல்படுத்திய திட்டங்கள் சொதப்பலில் முடிந்துள்ளன. கடந்த முறையை விட பா.ஜ., 10 ஆயிரம் ஓட்டுகளை இழந்துள்ளது. ஆனால், சுரேந்திரன் சேலக்கரை தொகுதியில் ஓரிரு முறைதான் பிரசாரம் செய்தார். அங்கு, பா.ஜ.,வின் ஓட்டு 9,500 அதிகரித்துள்ளது. கட்சியின் அமைப்பிலுள்ள குறைபாடே, பாலக்காடு தோல்விக்குக் காரணம் என்கின்றனர், கட்சியின் முக்கிய தலைவர்களான முரளிதரன் மற்றும் கிருஷ்ணதாசின் ஆதரவாளர்கள்.
பாலக்காட்டில் ஷோபாவை வேட்பாளராக நிறுத்தியிருந்தால், வெற்றி பெற்றிருக்கலாம் என்கின்றனர். இந்த இடைத்தேர்தல் முடிவு ஒரு சமிக்ஞைதான், தலைமையில் மாற்றம் இல்லாவிட்டால், மாநிலத்தில் பா.ஜ.,வின் நிலை பரிதாபத்துக்கு உரியதாகி விடும் என, எச்சரிக்கின்றனர்.
பா.ஜ., மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சுரேந்திரன் கூறுகையில், “தலைவர்கள் உத்தரவிடுவது மட்டுமின்றி களத்திலும் இறங்க வேண்டும். தொண்டர்களின் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு ,கவனம் செலுத்தாவிட்டால், கட்சி வளராது. சந்தீப் வாரியர் கட்சியில் இருந்து விலகியபோது அவரைத் தக்க வைக்க முயற்சி செய்திருக்க வேண்டும். யார் போனாலும் பரவாயில்லை என்ற எண்ணம் சரியல்ல” என்றார்.
மூத்த தலைவரும், தேசிய கவுன்சில் உறுப்பினருமான சிவராஜன் கூறுகையில், “கட்சியின் அடித்தளத்தில் எந்த பாதிப்பும் இல்லை. மேற்கூரையை அகற்றி சீரமைக்க வேண்டும். தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க அவசரக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்” என்றார்.அதேவேளையில், நல்ல வேட்பாளரை நிறுத்தி, பூசல்களை மறந்து ஒற்றுமையுடன் பாடுபட்டால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை, பாலக்காடு தொகுதியின் வெற்றி, காங்கிரஸ் கட்சிக்கு அளித்துள்ளது.
மா.கம்யூ., ஆறுதல்
பாலக்காட்டை இழந்தாலும், சேலக்கரையில் வென்று ஆறுதல் பெற்றிருக்கிறது மா.கம்யூ.,. கடந்த 8 ஆண்டுகளாக மா.கம்யூ., தலைமையிலான இடது ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. திருக்காக்கரை, புதுப்பளி சட்டசபை இடைத்தேர்தல்களிலும், லோக்சபா தேர்தலிலும் கட்சி தோல்வி அடைந்திருந்தது.
சேலக்கரை, மா.கம்யூ.,வின் அசைக்க முடியாத கோட்டையாக இருப்பினும், இடைத்தேர்தலில், வலுவான மும்முனைப் போட்டியில் 12 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி, அக்கட்சிக்கு தெம்பூட்டியுள்ளது .பா.ஜ., 3ம் இடம் பிடித்தாலும், கடந்த முறையை விட 9,500 ஓட்டுகளைக் கூடுதலாகப் பெற்றுள்ளது.நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டு வரும் நிலையில், இந்த தொகுதியில் கிடைத்திருக்கும் வெற்றியானது, வாராது வந்த மாமணியாக அந்த கட்சியினரால் பார்க்கப்படுகிறது.
வயநாடு
வயநாடு லோக்சபா இடைத்தேர்தலில், பிரியங்கா 4 லட்சத்து 10 ஆயிரத்து 931 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்; ராகுல், 3.64 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வென்றிருந்தார். ஆனால், அப்போது, இ.கம்யூ., சார்பில் வலுவான வேட்பாளராக ஆனி நிறுத்தப்பட்டிருந்தார். மாநில தலைவரான சுரேந்திரனே போட்டியிட்டும், 1.41 லட்சம் ஓட்டுகளுடன் 3ம் இடம்தான் பிடிக்க முடிந்தது.
தற்போதும் அதுவேதான் நடந்திருக்கிறது. மத்தியில் ஆளும் கட்சியின் வேட்பாளரை எம்.பி.,யாகத் தேர்ந்தெடுக்காமல், காங்.,குக்கு ஆதரவளித்திருக்கின்றனர் வயநாடு தொகுதி மக்கள். கடந்த முறையை விட ஓட்டுகளை இழந்து, இம்முறையும் 3ம் இடம் பிடித்திருக்கிறது
பா.ஜ.,
மா.கம்யூ., காங்., கட்சிகள் தங்கள் இருப்பை உறுதி செய்துகொண்ட நிலையில், பா.ஜ.,வின் நம்பிக்கைக்குரிய தொகுதியில் படுதோல்வி அக்கட்சியின் கட்டமைப்பை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது. தேசியத் தலைமையின் ரியாக் ஷன் எப்படி இருக்கும் என்பதுதான், கேரள பா.ஜ.,வினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.