கார்கே குழுமத்துக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியது ஏன்? காங்., அரசிடம் விளக்கம் கேட்கிறார் கவர்னர் கெலாட்
கார்கே குழுமத்துக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியது ஏன்? காங்., அரசிடம் விளக்கம் கேட்கிறார் கவர்னர் கெலாட்
ADDED : செப் 02, 2024 10:39 PM

பெங்களூரு : காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குடும்பத்தினருக்கு சொந்தமான சித்தார்த்தா விஹாரா டிரஸ்ட்டிற்கு, கர்நாடக அரசு, 5 ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கியிருந்தது. 'இது எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது' என்று விளக்கம் அளிக்கும்படி, மாநில தலைமை செயலருக்கு, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று நோட்டீஸ் அனுப்பினார். இந்த விஷயத்தில், அமைச்சர்கள் பிரியங்க் கார்கே, எம்.பி.பாட்டீல் ஆகியோருக்கு சிக்கல் எழுந்துள்ளது.
காங்கிரஸ் தேசிய தலைவராக இருப்பவர், கர்நாடகாவின் கலபுரகியை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே. இவரது தலைமையில், 'சித்தார்த்தா விஹாரா டிரஸ்ட்' செயல்பட்டு வருகிறது.
ரூ.25 கோடி முதலீடு
இந்த குழுமத்தில், அவரது மனைவி ராதாபாய், மகனும் மாநில ஐ.டி., - பி.டி., துறை அமைச்சருமான பிரியங்க் கார்கே, இளைய மகன் ராகுல் கார்கே, மருமகனும் கலபுரகி எம்.பி.,யுமான ராதாகிருஷ்ணா தொட்டமணி ஆகியோர் டிரஸ்டிகளாக உள்ளனர்.
இந்த டிரஸ்டிற்கு, பெங்களூரு தேவனஹள்ளி அருகில் உள்ள வசந்தபுராவில் கர்நாடக தொழில் மேம்பாட்டு வாரியம் சார்பில், சி.ஏ., எனும் சிவிக் அமினிட்டி என்ற மக்களின் நலன் கருதி, குறிப்பிட்ட வசதிக்காக பயன்படுத்தும் வகையில், சமீபத்தில், 5 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கப்பட்டது.
அந்த டிரஸ்ட், அங்கு 25 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தை, கார்கே குழுமத்துக்கு, எஸ்.சி., கோட்டாவின் கீழ், இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
மாநில அமைச்சராக இருக்கும் பிரியங்க் கார்கே, அதிகார துஷ்பிரயோகம் செய்து, தங்கள் டிரஸ்டிற்கு இலவசமாக அரசு நிலத்தை ஒதுக்கி கொண்டுள்ளதாகவும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும்படியும், கர்நாடக மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி, ஆகஸ்ட் 27ம் தேதி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் அளித்தார்.
இந்நிலையில், 'எந்த அடிப்படையில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சொந்தமான டிரஸ்டுக்கு இலவசமாக 5 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது' என்றும், இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படியும், மாநில தலைமை செயலர் ரஜ்னீஷ் கோயலுக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட், நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
அரசியல் அமைப்பு
இது குறித்து, அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியதாவது:
எங்கள் விஷயத்திலும் விளக்கம் கேட்டு, கவர்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கவர்னருக்கு, இரண்டு அரசியல் அமைப்பு உள்ளன. பா.ஜ., - ம.ஜ.த.,வுக்கு ஒரு அரசியல் அமைப்பு, காங்கிரசுக்கு ஒரு அரசியல் அமைப்பு உள்ளது.
பா.ஜ.,வினர் எங்கள் குடும்ப விஷயத்தில் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆரம்பத்தில், ஐந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். பின், இரண்டாக குறைத்து கொண்டனர்.
தற்போது, மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி மட்டுமே குற்றஞ்சாட்டி உள்ளார்.
பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் ஆகியோர் மீதும் பல குற்றச்சாட்டுகள் உள்ளன.
அவர்கள் விஷயத்தில் ஏன் கவர்னர் விளக்கம் கேட்கவில்லை. நான் ஒரு தலித் என்பதால், எனக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,வினர் சூழ்ச்சி செய்கின்றனர்.
தவறான தகவல்
பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்களின் ஆவணங்கள், கவர்னர் மேஜை மீது அழுகும் நிலையில் உள்ளன.
அது குறித்து அவர் கேள்வி எழுப்பவில்லை. எந்த கோப்புகளும் என்னிடம் இல்லை என்று கவர்னர் தவறான தகவல் அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கார்கே குழுமத்துக்கு இலவசமாக அரசு நிலம் ஒதுக்கிய விஷயத்தில், அவரது மகனும், அமைச்சருமான பிரியங்க் கார்கே, மாநில கனரக தொழில்கள் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் ஆகியோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.