குற்ற பின்னணி வேட்பாளர் ஏன்? அரசியல் கட்சிகள் விளக்கம்
குற்ற பின்னணி வேட்பாளர் ஏன்? அரசியல் கட்சிகள் விளக்கம்
ADDED : ஜன 18, 2025 12:22 AM

புதுடில்லி, ஜன. 18-
மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்களில் குற்ற வழக்குகள் உடையவர்களை வேட்பாளர்களாக தேர்ந்தெடுத்ததற்கு, அவர்களின் நிர்வாக திறன், பொது சேவையில் உள்ள அர்ப்பணிப்பே காரணம் என, அரசியல் கட்சிகள் சாக்கு தெரிவித்துள்ளன.
மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபைகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. மஹாராஷ்டிராவில் பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணியும், ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணியும் வெற்றி பெற்றன.
குற்ற வழக்குகள் உள்ளவர்களை வேட்பாளர்களாக நிறுத்தினால், அவர்களை தேர்வு செய்ததற்கான காரணத்தை கட்சித் தலைமை தெரிவிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல்களில் தாக்கல் செய்யப்பட்ட 1,286 வேட்பாளர்களின் பார்ம் சி7 விண்ணப்பத்தை, ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் ஆய்வு செய்தது.
அதன் விபரம்:
மஹாராஷ்டிராவில் போட்டியிட்ட 1,052 வேட்பாளர்களில், 503 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 32 சதவீதம் பேர் மீது தீவிர குற்றச்சாட்டுகள் உள்ளன.
ஜார்க்கண்டில் போட்டியிட்ட 234 பேரில், 105 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவற்றில், 35 சதவீதம் தீவிரமான குற்றச்சாட்டுகள்.
வேட்பாளர்களின் நிர்வாக திறன், சமூக சேவையில் உள்ள அர்ப்பணிப்பு, மக்கள் மத்தியில் செல்வாக்கு, வெற்றி பெறும் வாய்ப்புள்ளவர் போன்றவை தேர்வுக்கான காரணமாக சொல்லப்பட்டுள்ளன.
மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்., - சரத் பவார் பிரிவு, ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் குற்ற வழக்குள்ள வேட்பாளர்களின் தேர்வுக்கு அக்கட்சிகள் விளக்கம் அளிக்கவில்லை.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.