அரசியலுக்காக இங்கு ஏன் வருகிறீர்கள்? எத்னாலை சாடிய உச்ச நீதிமன்றம்!
அரசியலுக்காக இங்கு ஏன் வருகிறீர்கள்? எத்னாலை சாடிய உச்ச நீதிமன்றம்!
ADDED : ஜன 30, 2025 08:47 PM
துணை முதல்வர் சிவகுமார் மீதான சி.பி.ஐ., விசாரணையை அரசு திரும்ப பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 'உங்கள் அரசியல் லாபத்திற்காக ஏன் இங்கு வருகிறீர்கள்' என்று, பா.ஜ., -- எம்.எல். ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலை, உச்சநீதிமன்றம் சாடியுள்ளது.
கர்நாடக துணை முதல்வர் சிவகுமார். இவர் மீதான, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க முந்தைய பா.ஜ., அரசு அனுமதி கொடுத்தது.
ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், சிவகுமாரிடம் சி.பி.ஐ., விசாரிக்க முந்தைய அரசு அளித்த அனுமதியை திரும்ப பெற்றது.
இதனை எதிர்த்து சி.பி.ஐ., மற்றும்- பா.ஜ., -- எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தரப்பில், உயர் நீதிமன்றத்தில் தனித்தனி மனுக்கள் தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி நாக பிரசன்னா, 'இந்த மனுவை இங்கு விசாரிப்பதை விட உச்ச நீதிமன்றத்தில் விசாரித்தால் நன்றாக இருக்கும்' என்று கூறி, மனுக்களை தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் பசனகவுடா பாட்டீல் எத்னால், மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை, நீதிபதி சூர்யகாந்த் நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்து கொண்டார்.
சிவகுமார் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி வாதாடுகையில், 'இந்த மனு முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சி.பி.ஐ., விசாரணைக்கு அரசு அனுமதி அளிக்கும்போது, திரும்பப் பெறவும் உரிமை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.
எத்னால் தரப்பு வக்கீல் பரமேஸ்வர் வாதாடுகையில், ''இது அரசியல் பழிவாங்கும் வழக்கு இல்லை. சி.பி.ஐ., விசாரணையை திரும்ப பெற்றதில் ஏராளமான உள்நோக்கம் உள்ளது,'' என்றார்.
நீதிபதி சூர்யகாந்த் கூறுகையில், 'அரசியல் லாபத்திற்காக உச்ச நீதிமன்றம் முன்பு ஏன் வருகிறீர்கள்.
உங்களுக்கு தேவை என்றால் அரசியல் களத்தில் தேர்தலில் நின்று போட்டியிட்டு வெற்றி பெறுங்கள்' என்று கோபமாக கூறினார். பின், மனு மீதான அடுத்த விசாரணையை மார்ச் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
- -நமது நிருபர் --

