ஏன் சத்தம் போடுறீங்க...: தலைமை நீதிபதி கோபத்தால் மன்னிப்பு கேட்ட வழக்கறிஞர்
ஏன் சத்தம் போடுறீங்க...: தலைமை நீதிபதி கோபத்தால் மன்னிப்பு கேட்ட வழக்கறிஞர்
UPDATED : செப் 09, 2024 03:26 PM
ADDED : செப் 09, 2024 03:16 PM

புதுடில்லி: உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, சத்தமாக பேசிய வழக்கறிஞரை தலைமை நீதிபதி கண்டித்தார். இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார்.
கோல்கட்டா பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரம் குறித்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, ஜே பி பர்திவாலா ஆகியோர் விசாரித்தனர். அப்போது, மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், 'இச்சம்பவத்தை கண்டித்து நடந்த போராட்டத்தின் போது, கவுஸ்தேவ் பக்சி என்ற வழக்கறிஞர் கற்களை வீசும் வீடியோக்களும், புகைப்படமும் என்னிடம் உள்ளன' என குற்றம் சாட்டினார். அப்போது கவுஸ்தேவ் பக்சியும் கோர்ட்டில் இருந்தார்.கபில் சிபல் பேச்சு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த கவுஸ்தேவ் பக்சி சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் சேர்ந்தவர் ஆவார். பக்சி எழுந்து நின்று, 'நீதிமன்றத்தில் ஒரு மூத்த வழக்கறிஞர் எப்படி குற்றம்சாட்டலாம்' என கபில் சிபலை பார்த்து சத்தமாக கேள்வி எழுப்பினார்.
அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது ; முதலில் உங்கள் சத்தத்தை குறைக்க முடியுமா? தலைமை நீதிபதி முன் நீங்கள் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள். பல்லாயிரகணக்கானோர் முன்னர் அல்ல. உங்களின் நடவடிக்கையை கடந்த 2 - 3 மணி நேரமாக கவனித்து வருகிறேன். நீதிமன்றத்திற்கு வெளியே பேசுவதை போல் பேசுகீறர்கள் என கோபமாக கூறினார். இதனையடுத்து கவுஸ்தேவ் பக்சி தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.