என்னை எதற்கு திட்டுறீங்க: பா.ஜ.,வை கேட்கிறார் கெஜ்ரிவால்!
என்னை எதற்கு திட்டுறீங்க: பா.ஜ.,வை கேட்கிறார் கெஜ்ரிவால்!
ADDED : டிச 31, 2024 06:25 PM

புதுடில்லி: கோயில் அர்ச்சகர்களுக்கு கவுரவ சம்பளம் வழங்கும் திட்டத்திற்காக என்னை விமர்சிப்பது ஏன் என டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டில்லியில் உள்ள கோவில் அர்ச்சகர்கள் மற்றும் குருத்வாராவில் பணிபுரிபவர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் கவுரவ சம்பளம் அளிக்கும் வகையில், 'பூஜாரி கிராந்தி சம்மான் யோஜனா' என்ற திட்டத்தை அறிவித்தார்.இது டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்ததும் அமல்படுத்தப்படும் எனக்கூறியுள்ளார்.
இது குறித்து பா.ஜ., மாநில தலைவர் வீரேந்திர சச்தேவா கூறுகையில், ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக, ஜனரஞ்சகமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் எனக்கூறினார்.
இது தொடர்பாக கெஜ்ரிவால் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'பூஜாரி கிராந்தி சம்மான் யோஜனா' திட்டத்தை அறிவித்தது முதல் பா.ஜ.,வினர் தொடர்ந்து என்னை விமர்சனம் செய்கின்றனர். என்னை விமர்சனம் செய்வதால், நாட்டிற்கு பலன் கிடைக்குமா என அவர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன். 20 மாநிலங்களில் உங்கள் ஆட்சி உள்ளது. குஜராத்தில் 30 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளீர்கள். அங்கு, இதுவரை அர்ச்சகர்கள் உள்ளிட்டோரை நீங்கள் மதிக்காதது ஏன்? இனிமேலாவது அதை செய்யுங்கள். அனைவருக்கும் அதற்கான பாதையை நான் காட்டி உள்ளேன். என்னை விமர்சிப்பதற்கு பதில், அனைவரும் பலன் பெறும் வகையில், நீங்கள் ஆட்சி செய்யும் 20 மாநிலங்களில் அதனை நீங்கள் அமல்படுத்தலாமே? என்னை விமர்சிப்பது ஏன்? இவ்வாறு கெஜ்ரிவால் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.