65 கி.மீ.,யை கடக்க ரூ.150 கட்டணம் எதற்கு? மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் பாய்ச்சல்
65 கி.மீ.,யை கடக்க ரூ.150 கட்டணம் எதற்கு? மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் பாய்ச்சல்
ADDED : ஆக 19, 2025 01:57 AM

புதுடில்லி : 'தேசிய நெடுஞ்சாலையில் 65 கி.மீ., துாரத்தை கடக்க, ஒரு வாகன ஓட்டி 12 மணி நேரம் வரை காத்திருக்க நேரும்போது, எதற்காக 150 ரூபாய் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும்?' என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது பள்ளியேக்கரா சுங்கச்சாவடி. இந்த சுங்கச்சாவடிக்கு உட்பட்ட எடப்பள்ளி - மன்னுத்தி தேசிய நெடுஞ்சாலையில், பராமரிப்பு மற்றும் அணுகு சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், 65 கி.மீ., தொலைவிலான இந்த பாதையில் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது.
இந்தச் சூழலில், சமீபத்தில் லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், எடப்பள்ளி - மன்னுத்தி தேசிய நெடுஞ்சாலையை கடக்க, 12 மணி நேரம் வரை வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால், சாலையை மோசமான நிலையில் பராமரித்து வரும் பள்ளியேக்கரா சுங்கச்சாவடி நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தை கண்டித்தது. அத்துடன் நான்கு வாரங்களுக்கு அந்த சுங்கச்சாவடி நிர்வாகம், வாகன ஓட்டிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கவும் தடை விதித்தது.
கேரள உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சுங்கச்சாவடி நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப் பட்டது.
கடந்த 14ம் தேதி இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு, உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட மறுப்பு தெரிவித்தது.
தொடர்ந்து இவ்வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சாலையின் ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு செல்ல வாகன ஓட்டிக்கு 12 மணி நேரம் வரை ஆகும்போது, எதற்காக சுங்கக் கட்டணமாக 150 ரூபாய் செலுத்த வேண்டும்? ஒரு மணி நேரத்தில் 65 கி.மீ., துாரம் கொண்ட அந்த சாலையை கடந்து விட முடியும். அப்படி இருக்கும்போது, கூடுதலாக 11 மணி நேரம் வரை வாகன ஓட்டிகள் ஏன் காத்திருக்க வேண்டும்?
மேலும், அந்த காத்திருப்புக்காக சுங்கக் கட்டணம் ஏன் செலுத்த வேண்டும்? லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக அரசு தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தை ஏற்க முடியாது. ஏனெனில், சாலையில் இருந்த பள்ளத்தால் தான் நிலைதடுமாறி அந்த லாரி கவிழ்ந்தது. எனவே, இந்த வழக்கின் தீர்ப்பை நிறுத்தி வைக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
முன்னதாக இவ்வழக்கில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், 'சுங்கக் கட்டண வசூலை தற்காலிகமாக நிறுத்துவதற்கு பதிலாக, அந்த கட்டணத்தை குறைத்து வசூலிக்க உத்தரவிடலாம்' என கேட்டுக் கொண்டார். '12 மணி நேர காத்திருப்பு என்பதை கட்டணக் குறைப்பால் ஈடுகட்ட முடியாது' என கூறி, உச்ச நீதிமன்றம் அந்த கோரிக்கையை நிராகரித்தது.