கலபுரகி மீது தீரா காதல் ஏன ் ? பா.ஜ.,வுக்கு கார்கே கேள்வி!
கலபுரகி மீது தீரா காதல் ஏன ் ? பா.ஜ.,வுக்கு கார்கே கேள்வி!
ADDED : பிப் 22, 2024 11:03 PM

கலபுரகி: ''இதுவரை இல்லாத காதல், இப்போது பா.ஜ., தலைவர்கள், கலபுரகிக்கு எதற்காக வருகின்றனர்?'' என, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார்.
கலபுரகியில் அவர் அளித்த பேட்டி:
கலபுரகி மாவட்டத்தின் மீது பா.ஜ.,வின் மத்திய தலைவர்களுக்கு அதிக அன்பு உள்ளது. இங்கு திரும்ப திரும்ப வந்து செல்கின்றனர்.
யாரை குறி வைக்கின்றனர் என்று தெரியவில்லை. இதுவரை இல்லாத காதல், இப்போது பா.ஜ., தலைவர்களுக்கு கலபுரகி மீது ஏற்பட்டுள்ளது. எதற்காக வருகின்றனர்?
அடிக்கடி வருகை
எந்த தேர்தலுக்கும் வராதவர்கள், கடந்த முறை மூன்று முறை வந்து சென்றுள்ளனர். இம்முறையும் மீண்டும் மீண்டும் வருகின்றனர்.
தங்கள் கட்சி வேட்பாளரை தேடி, பா.ஜ., மத்திய தலைவர்கள் இங்கு வந்திருக்கலாம்.
நரேந்திர மோடி இருந்தால் தான் நாடு என்கின்றனர். கடந்த 70 ஆண்டுகளாக மோடி இல்லாமல் நாடு ஓடவில்லையா? ஐ.கே.குஜ்ரால், எச்.டி.தேவகவுடா, அடல் பிஹாரி வாஜ்பாய் உட்பட பல தலைவர்கள், நாட்டை கட்டமைத்து உள்ளனர்.
ஏழைகள் மீது கருணை காட்டி, ஆட்சி செய்துள்ளனர். ஆனால் மோடி, சர்வாதிகாரத்தை கொண்டுவர விரும்புகிறார். அதைத்தான் செய்கின்றனர். அவர்களின் அரசு வெறும் 'விளம்பர அரசு' தான்.
ஊடகங்கள்
ஊடக உரிமையாளர்கள், பிரதமர் மோடியால் கட்டுப்படுத்தப்படுகின்றனர். நான் சுதந்திரமாக சில கருத்துகளை தெரிவித்தால், நீங்கள் ஒளிபரப்புவீர்களா? எனது அறிக்கை சமர்ப்பித்ததும், செய்தி ஆசிரியர்களால் வெட்டப்படும்.
மோடி தனக்கு வேண்டாததை நீக்குகிறார். அனைத்தும் பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ளது.
நாட்டில் 400, 500 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பிரசாரத்தில் மோடி கூறி வருகிறார். லோக்சபாவில் 543 இடங்கள் மட்டுமே உள்ளதால், வேறு யாருக்கும் எதுவும் கிடைக்காது. 543 தொகுதிகளிலும் வெற்றி பெறுவாரா?
மத்திய தன்னாட்சி அமைப்புகளை, தவறாக பயன்படுத்தினால், மக்களை மிரட்டி கட்சிக்குள் இழுத்தால், ஜனநாயகம் நிலைக்காது. இது இப்படியே தொடர்ந்தால், அரசியல் சாசனமும், மக்களும் பாதிக்கப்படுவர்.
காங்கிரசில் இருப்பவர்கள் ஊழல்வாதிகள் என்று கூறிவிட்டு, எங்கள் கட்சியை சேர்ந்தவர்களை, அவர்கள் கட்சியில் சேர்த்து கொள்கின்றனர். இதுபோன்ற பா.ஜ.,வின் இரட்டை வேடம் ஆரம்பத்தில் இருந்து நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.