மங்களூரு வங்கியை கொள்ளையடிக்க வெள்ளி கிழமையை தேர்வு செய்தது ஏன்?
மங்களூரு வங்கியை கொள்ளையடிக்க வெள்ளி கிழமையை தேர்வு செய்தது ஏன்?
ADDED : ஜன 27, 2025 11:35 PM

தட்சிண கன்னடா; ''மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் வெள்ளிக் கிழமையன்று, வங்கியை கொள்ளையடிக்க கொள்ளையர்கள் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது,'' என, மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
மங்களூரு, கொட்டேகார் கூட்டுறவு வங்கியில் கொள்ளை நடந்ததாக, கடந்த 17ம் தேதி, உல்லால் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அன்றைய தினம், முதல்வர் சித்தராமையா மங்களூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்தார். அங்கு அதிகாரிகள் குழுமியிருந்தனர்.
கொள்ளை சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், உல்லால் இன்ஸ்பெக்டரும், ஏ.சி.பி.,யும் விசாரணையை துவக்கினர்.
விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்ட கண்ணன் மணி, முருகாண்டி, ராஜேந்திரன், முருகாண்டியின் தந்தை சண்முகசுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 18.314 கிலோ தங்கம், 11 லட்சம் ரூபாயில், 3,80 லட்சம் ரூபாய் ரொக்கம் மீட்கப்பட்டு உள்ளன. இரண்டு கைத்துப்பாக்கிகள், மூன்று தோட்டாக்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக வரலாற்றில் இது இரண்டாவது பெரிய வங்கிக் கொள்ளையாக கருதப்பட்டது. அன்றைய தினம் வங்கி கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி இருந்ததால், எங்களுக்கு எந்த தடயமும் கிடைக்கவில்லை.
ஏ.சி.பி., மற்றும் தெற்கு துணை பிரிவு மற்றும் கிரைம் பிராஞ்ச் ஏ.சி.பி., தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
கொள்ளைக்கு முன்பு கார் எங்கு நிறுத்தப்பட்டிருந்தது என்று ஆய்வு செய்தனர். காரில் இருந்த நம்பர் பிளேட் போலியானது என்பது தெரியவந்தது. சுங்கச்சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.
இதில், ஹெஜமாடி சுங்கச்சாவடியை அந்த கார் நடந்து சென்றதையும், சூரத்கல் பெட்ரோல் பங்க்கில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த நேரத்தில், காரின் கர்நாடகா நம்பர் பிளேட்டை, மஹாராஷ்டிரா என மாற்றி விட்டனர்.
இந்த கார் மும்பையில் இருந்து வந்ததை உறுதி செய்தோம். அதை வைத்து, காரின் உண்மையான எண்ணை கண்டுபிடித்தோம். அங்கு சென்ற போலீஸ் குழுவினருக்கு, இக்கும்பல் தொடர்பாக கூடுதல் தகவல் கிடைத்தது.
கொள்ளையர்களில் இருவர் தமிழகம் வழியாக கேரளாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர். மும்பைக்கு ரயிலில் சென்றவர்கள், அங்கிருந்து தமிழகம் செல்ல திட்டமிட்டிருந்தனர். நாங்களும் விசாரணையை துரிதப்படுத்தினோம்.
இதில், 'ஏ1' குற்றவாளியான முருகாண்டியின் உடன் இருந்த கண்ணன் மணியை, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், கிரைம் பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், முருகாண்டி குறித்து கூடுதல் தகவல் கிடைத்தது. திருமனந்தபுரத்தில் பல குழுக்களாக பிரிந்து, முருகாண்டியை கைது செய்தோம்.
வங்கி இருந்த கே.சி.சாலையில் பெரும்பாலும் முஸ்லிம்கள் கடை வைத்துள்ளனர். வெள்ளிக் கிழமையன்று இவர்கள் தொழுகைக்கு சென்றுவிடுவர்.
அந்நேரத்தில் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் என்பதால், அன்றைய தினம் கொள்ளை அடிக்க திட்டமிட்டது, விசாரணையில் தெரியவந்தது.
இக்கொள்ளையில் ஈடுபட்ட சசி என்பவர் கைது செய்யப்பட்டால் மட்டுமே, மேலும் நான்கு பேரை கைது செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

