போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டது ஏன்: கேட்கிறார் சிதம்பரம்
போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டது ஏன்: கேட்கிறார் சிதம்பரம்
ADDED : ஜூலை 29, 2025 10:06 PM

புதுடில்லி: '' ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் வெற்றிகரமாக நடந்து கொண்டு இருக்கும் போது போர் நிறுத்தத்துக்கு ஓப்புக் கொண்டது ஏன்?'' என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
ராஜ்யசபாவில், 'ஆபரேஷன் சிந்தூர்' மீதான விவாதத்தில் சிதம்பரம் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வலிமையானதா என கேட்டால் ஆமாம் என்பேன். அது வெற்றிகரமானதா என கேட்டால் ஆமாம் என்பேன். இது தீர்க்கமானதா எனக்கேட்டால், அதற்கு காலம் தான் பதில் கூறும் என்பேன். பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை வெற்றிகரமானதாக சென்று கொண்டு இருந்த போது போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டது ஏன்?
பாகிஸ்தானும், சீனாவும் தனித்தனி முனைகள் அல்ல. அவை இரண்டும் இணைந்த முனைகள் தான். இணைந்த முனைகளை எதிர்கொள்ள அரசிடம் திட்டம் உள்ளதா? ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க பல்வேறு வெளிநாடுகளுக்கு குழுக்கள் அனுப்பப்பட்ட நிலையில் இலங்கை, மியான்மர், நேபாளம் மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு அப்படி குழுவை அனுப்பாதது ஏன்?
பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு அனைத்து நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. ஆனால், எந்த நாடும் பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடவில்லை. இவ்வாறு சிதம்பரம் பேசினார்.

