எனக்கு எதிராக அண்ணன் மகனை களமிறக்கியது ஏன்; சரத்பவாரை கேட்கிறார் அஜித் பவார்
எனக்கு எதிராக அண்ணன் மகனை களமிறக்கியது ஏன்; சரத்பவாரை கேட்கிறார் அஜித் பவார்
UPDATED : நவ 25, 2024 03:51 PM
ADDED : நவ 25, 2024 03:47 PM

மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரமதி தொகுதியில் எனக்கு எதிராக எனது அண்ணன் மகன் யுகேந்திரவை களமிறக்கியது ஏன் என தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரமதி தொகுதியானது சரத்பவாரின் குடும்பத்திற்கு ஆதரவாக உள்ளது. இங்கு தொடர்ந்து இரண்டு முறை சரத்பவார் வெற்றி பெற்றார். தொடர்ந்து அஜித் பவார் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் இத்தொகுதியில் மீண்டும் அவர் களமிறங்கினார். அவரை எதிர்த்து அஜித்பவாரின் மூத்த சகோதரரான ஸ்ரீனிவாஸ் ஆனந்த்ராவ் பவாரின் மகன் யுகேந்திராவை சரத்பவார் களமிறக்கினார். ஆனால், தேர்தலில் இவரை, ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் அஜித் பவார் தோற்கடித்தார்.
இது தொடர்பாக அஜித் பவார் கூறியதாவது:
யுகேந்திரா தொழில் செய்து வருகிறார். அவருக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த தேர்தலில் எனக்கு எதிராக எனது அண்ணன் மகனை களமிறக்கியதற்கு எந்த காரணமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
லோக்சபா தேர்தலில் சுப்ரியா சுலேவை எதிர்த்து, அஜித் பவார் மனைவி சுனேத்ராவை களமிறக்கினார். ஆனால் சுப்ரியா சுலே 1.5 லட்சம் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனை தவறு என அஜித் பவார் ஒப்புக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், லோக்சபா தேர்தலில் நான் தவறு செய்துவிட்டேன். இதற்காக எனது குடும்பத்தை சேர்ந்தவரையே எனக்கு எதிராக களமிறக்குவோம் என்ற செய்தியை அனுப்புகிறீர்களா எனக்கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, அவரின் மற்றொரு உறவினரான ரோகித் பவார் கார்ஜேத் ஜாம்கெத் தொகுதியில் வெற்றி பெற்றார். இது தொடர்பாக அஜித் பவார் கூறுகையில், ரோகித் பவார் குறைந்த ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். அங்கு நான் ஏதாவது ஒரு கூட்டத்தில் பேசியிருந்தால் நிலைமை என்ன ஆகியிருக்கும் என்பதை நினைத்து பாருங்கள் எனக்கூறினார்.
ரோகித் பவாரும் இதனை ஆமோதிப்பது போல், அஜித்பவார், எனது தொகுதியில் பேசியிருந்தால் நிலைமை வேறு மாதிரி ஆகியிருக்கும். ஆனால், அவர் பாரமதி தொகுதியில் பிசியாக இருந்தார். எனது தொகுதிக்கு வர முடியவில்லை என்றார். தேர்தல் வெற்றிக்காக அஜித் பவாருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.