'உலகத்தில் உள்ள உதாரணங்களை அமெரிக்கா ஏன் பார்க்கவில்லை?'
'உலகத்தில் உள்ள உதாரணங்களை அமெரிக்கா ஏன் பார்க்கவில்லை?'
ADDED : மார் 17, 2024 11:30 PM

புதுடில்லி: சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக அமெரிக்காவின் விமர்சனத்துக்கு பதிலளித்த, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ''உலகத்தில் இதுபோன்ற பல உதாரணங்கள் இருப்பதை அமெரிக்கா ஏன் பார்க்கவில்லை,'' என, கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டம் சமீபத்தில் அமலுக்கு வந்தது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அமெரிக்கா, இதற்கு கவலை தெரிவித்தது.
நடவடிக்கை
இது எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை கூர்ந்து கவனிக்க உள்ளதாக கூறியுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதியை கொலை செய்வதற்கு இந்தியர் ஒருவர் சதி செய்ததாகவும், இதனால், இரு நாட்டு உறவில் பாதிப்பு ஏற்படும் என்றும், இந்தியாவுக்கான அமெரிக்க துாதர் எரிக் கார்செட்டி கூறியிருந்தார்.
புதுடில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பார்வையாளர்களின் இது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்து, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:
இந்தியாவையும், கனடாவையும் அமெரிக்கா ஒன்றாக பார்க்கிறது. காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு கனடா எப்படி ஆதரவாக இருக்கிறது என்பது தெரியும்.
ஆனால், அதை மறந்து விட்டு பேசுவது அமெரிக்காவுக்கு முறையல்ல. நாங்கள் ஒவ்வொரு நாட்டையும் தனித்தனியாகவே பார்க்கிறோம்.
அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதிக்கு எதிராக, திட்டமிட்ட குற்றக்குழுக்கள் செயல்பட்டுள்ளது தீவிரமான பிரச்னை.
பிரச்னை என்னவென்று பார்க்க வேண்டும். இதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
குடியுரிமை திருத்த சட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவாக கூறியுள்ளார். உங்கள் நாட்டுக்கு என, சில கொள்கைகள் இருக்கலாம்.
அதுபோல எங்களுக்கும் உள்ளது. நான் உங்கள் கொள்கை குறித்து கேள்வி எழுப்பவில்லை. ஆனால், வரலாறு தெரியாமல் பேசக் கூடாது.
பிரச்னை
இந்தியாவில் பிரிவினை ஏற்படவில்லை என்பது போலவும், அதன்பின் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை என்பது போலவும் பேசுகின்றனர்.
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது, பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருந்தவர்களுக்கு நம் தலைவர்கள் சில வாக்குறுதிகளை அளித்தனர். பிரச்னை ஏற்பட்டால், திரும்பி வந்தால் ஏற்பதாக கூறப்பட்டது.
ஆனால், இதற்கு முன் இருந்தவர்கள் அதை செய்யவில்லை.
தற்போது நாங்கள் செய்கிறோம். இதுபோல, குடியுரிமை அளிக்கப்பட்டது தொடர்பாக, இந்த உலகில் பல உதாரணங்கள் உள்ளன. அவையெல்லாம் ஏன், இவர்களுடைய கண்களுக்கு தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

